இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் கைப்பற்றல் : 3 பேர் கைது

83 0

இந்தியாவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உச்சிப்புளி அருகே தலைத்தோப்பு கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக டிரக்டரில் எடுத்துச் செல்லப்பட்ட பல இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் இன்று (25) ராமநாதபுரம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் மாத்திரை கடத்தலுடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்து, உச்சிப்புளி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கைக்கு வலி நிவாரணி மாத்திரைகள் கடத்தப்படவிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் தலைத்தோப்பு கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது டிரக்டரில் இருந்து பெட்டிகளை இறக்கிக்கொண்டிருந்தவர்கள் பொலிஸாரை கண்டதும் டிரக்டருடன் தப்பிச் சென்றுள்ளனர்.

அவ்வேளை, கடற்கரையில் அவர்கள் விட்டுச் சென்ற தலா 80 கிலோ எடை கொண்ட 10 பெட்டிகளில் இருந்த லட்சக்கணக்கான வலி நிவாரணி மாத்திரைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

அதனையடுத்து, இந்தக் கடத்தலுடன் தொடர்புடைய, பெருங்குளம் பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு, உச்சிப்புளி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

மேலும் டிரக்டருடன் தப்பிச் சென்ற நபர்களை தீவிரமாக உச்சிப்புளி பொலிஸார் தேடி வருகின்றனர்.