அ.தி.மு.க.வை நிலையற்றதாக ஆக்குவதற்கு பா.ஜ.க. காரணம் என்று மு.க.ஸ்டாலின் சொல்வது அபாண்டம்

226 0

அ.தி.மு.க.வை நிலையற்றதாக ஆக்குவதற்கு பா.ஜ.க. காரணம் என்று மு.க.ஸ்டாலின் சொல்வது அபாண்டம் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அ.தி.மு.க.வை நிலையற்றதாக ஆக்குவதற்கும், பிரிப்பதற்கும், இணைப்பதற்கும் பா.ஜ.க. காரணம் என்ற ஓர் அபாண்டத்தை சுமத்துகிறார்.

தமிழகத்தில் ஒரு குழந்தை கூட இதை நம்பாது என்றாலும் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சொல்லப்படும் இந்த கருத்துகளுக்கு கண்டனம் தெரிவிப்பது என் கடமை. அ.தி.மு.க. அவருக்கு பிரதான எதிர்க்கட்சி, ஆனால் பா.ஜ.க.வுக்கு எதிராக கருத்துகள் சொல்கிறோம் என்று அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக அவர் மறைமுக கருத்துகளை, சொல்லியிருப்பது அவருக்காக உழைத்துக்கொண்டிருக்கும் தி.மு.க. தொண்டர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

எந்நேரமும் தேர்தல் வரலாம், தங்கள் ஆட்சி, மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் என்றெல்லாம் துரைமுருகன் போன்றவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அ.தி.மு.க. நிலையாக இருக்க வேண்டும். அதை நிலைகுலைய செய்வது பா.ஜ.க. தான் என்ற தொனியில் கருத்து சொல்லியிருப்பதை அவர்கள் தொண்டர்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

அதேபோல், மாநில அரசு லோக் அயுக்தா அமைக்க வேண்டும். ஊழலினால் சம்பாதித்த பணம் எல்லாம் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றால் 21 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு, விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்கிறார்கள் என்று சர்காரியா கமிஷனால் பட்டம் சூட்டப்பட்ட காலக்கட்டத்தில் ஊழலினால் சம்பாதித்த பணத்தையும், சொத்தையும், முதலில் தி.மு.க. நிர்வாகிகளிடம் இருந்து தான் பறிமுதல் செய்ய வேண்டும்.

இன்று சாராய ஆலைகள் நடத்துபவர்களாகவும், கல்வியை வியாபாரமாக்கும் தனியார் கல்லூரிகளின் நிறுவனர்களாகவும், அரசியல் சார்ந்த செல்வந்தர்களாகவும் இருப்பது அதிகமாக தி.மு.க.வை சார்ந்தவர்களே. இன்று வருமான வரித்துறை போன்ற நிறுவனங்களை, அரசியலுக்கு பா.ஜ.க. பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டும் மு.க.ஸ்டாலின், தாங்கள் ஆட்சியில் இருந்தபோது இதை தான் செய்திருக்கிறார்களா?.

இன்று அய்யாக்கண்ணு முதல்-அமைச்சர் கொடுத்த உறுதிமொழியின் படி தனது உண்ணாவிரதத்தை முடித்தேன் என்று சொல்லிவிட்டு மு.க.ஸ்டாலினை சென்று சந்தித்துவிட்டு மறுபடியும் போராட்டத்தை தொடர்வேன் என்று அறிவிக்கிறார் என்றால், மு.க.ஸ்டாலின் பின்னணியில் தான் விவசாயிகள் போராட்டத்தை அரங்கேற்றினார்களா?. மத்திய மந்திரி பலமுறை சந்தித்துமே, பிரதமரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் பின்னணியில் அவர்கள் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.