கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் ஒருவரின் பயணப் பொதி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் வீட்டு பணிப்பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கத்தாரிலிருந்து கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி அதிகாலை 03.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலையத்தில் வைத்து வர்த்தகரின் பயணப் பொதி திருடப்பட்டுள்ளது.
திருடப்பட்ட பயணப் பொதி 06 இலட்சம் ரூபா பெறுமதியானது என்பதுடன் பயணப் பொதியினுள் 07 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் காணப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட வர்த்தகர் இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.
பின்னர், விமான நிலைய சிசிரிவி கமராவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வர்த்தகர் பயணித்த அதே விமானத்தில் பயணித்த வீட்டு பணிப்பெண் ஒருவர் வர்த்தகரின் பயணப் பொதியை திருடிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரான 56 வயதுடைய வீட்டு பணிப்பெண் ஹெம்மாத்தகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

