நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல், மோசடிகளை பயமின்றி நேரடியாக எங்களிடம் முறையிடுங்கள்

14 0

நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல், மோசடிகள் குறித்து  பயமின்றி  நேரடியாக தங்களிடம் முறையிடுமாறு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பு சுகததாச தேசிய விளையாட்டடுத்தொகுதி அதிகார சபையின் செயற்பாடுகளை கண்காணிக்க வியாழனன்று சென்றிருந்தபோது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அமைச்சருடன் பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுகத் திலகரத்ன, பிரதி இளைஞர் விவகார அமைச்சர் எரங்க குணசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர் சுனில் குமார கமகே,

‘அரசியல், கட்சி வேறுபாடு, இதுவரை இடம்பெற்ற குறைபாடுகள் எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு அதிகாரிகள் கடமையை சரிவர ஆற்றவேண்டும். ஆனால், இடம்பெற்ற திருட்டு, ஊழல், மோசடிகளை மறக்க முடியாது.

மானிட இரக்கம் நிறைந்த சமுதாயத்தை உருவாக்குவதே எமது குறிக்கோள். அதற்கு, ஊழல், மோசடி அற்ற நாட்டை உருவாக்க வேண்டும்.

‘நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல், மோசடிகள் குறித்து எம்மிடம் நேரடியாக வந்து சொல்லுங்கள். முன்பெல்லாம் அமைச்சரிலிருந்து உயர் அதிகாரிகளுக்கு எங்காவது தொடர்பு இருந்ததால் உங்களால் சொல்ல முடியாமல் இருந்தது.

இப்போது அப்படி அல்ல. பயம் இல்லாமல் எங்களுடன் இணையுங்கள்.

‘இன்றைய இளைஞர்களை போதைப் பொருள் பாவனையிலிருந்து விடுவிப்பதற்கும் இளைஞர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்கும் தொழில் வாய்ப்புகளை உறுதிப்படுத்த நாம் உழைக்க வேண்டும்.

‘இன, மத பேதமற்ற சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்வதே ஜனாதிபதி உள்ளிட்ட எமது புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும்.

தேசிய ஒற்றுமையை உருவாக்குவது எங்களின் முதற் பணியாக இருக்கிறது. அந்த இலக்கை நோக்கி உழைப்போம். குறுகிய கால, இடைக்கால, நீண்ட கால தேசிய திட்டங்களுக்கு அமைய நாம் செயல்பட ஆரம்பிக்க வேண்டும்.

‘விளையாட்டில் வெற்றிகள் அவசியம். ஆனால் வெற்றி, தோல்வி ஆகிய இரண்டையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உடைய தரமான வீரர்களை உருவாக்க வேண்டும்.

பாடசாலை காலத்திலேயே இந்தப் பண்புகளை வீரர்களுக்குப் புகட்டுவது நமது பொறுப்பும் கடமையும் ஆகும். றக்பி விளையாட்டின் போது பாடசாலை வீரர்கள் சண்டையிடுவதை சமூக ஊடகங்களில் அண்மையில் பார்த்தோம்.

அந்த நிலை மாறி, வீரர்கள் மத்தியில் தோழமையையும், விட்டுக்கொடுப்புத் தன்மையையும் வளரச் செய்யவேண்டும்.

‘பின்தங்கிய கிராமப்புற பாடசாலை ஒன்றிலிருந்து உருவாகி தேசத்திற்கு சர்வதேச வெற்றிகளை ஈட்டித்தந்த யுகத்தின் மிகவும் திறமையான விளையாட்டு வீரர் தற்போது விளையாட்டுத்துறைக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் பதவியை வகிக்கிறார்.

இது நம் நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம். சுகத் திலகரத்ன போன்ற வீரர்களின் அனுபவம் விளையாட்டின் முன்னேற்றத்திற்கு பெறுமதிமிக்கது’ என்றார்.

சுகததாச விளையாட்டுத் தொகுதி அதிகாரசபையின் கீழ் இயங்கும் மைதானங்களின் உட்கட்டமைப்பு மேம்பாடு, சுகததாச வெளியக விளையாட்டரங்கின் செயற்கை ஓடுபாதையை புனரமைத்தல், சுகததாச விளையாட்டு வளாகத்தின் 73 பேர்ச் காணியை வர்த்தமானி மூலம் தனியார் ஒருவருக்கு ஒப்படைத்தல், சுகததாச ஸ்போர்ட்ஸ் ஹோட்டலின் முறையான திட்டத்தின் படி மேம்படுத்துதல் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர்  அருண பண்டார, சுகததாச விளையாட்டுத் தொகுதிஅதிகாரசபையின் தலைவர் காமினி விக்ரமபால, அதன் பணிப்பாளர் எம்.எம்.சீ.பி. ஹேரத் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.