பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதி சரா டட்டெர்டே ஜனாதிபதி பேர்டினன்ட் மார்கோஸ் தன்னை கொலை செய்தால் அதன் பின்னர் அவரை கொலை செய்வதற்கு ஒருவரை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தென்கிழக்காசியா நாட்டின் இரு முக்கிய அரசியல் குடும்பங்களிடையே மோதல் தீவிரமடைவதை வெளிப்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ள துணைஜனாதிபதி என்னை கொலை செய்தால் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அவரது மனைவி சபாநாயகர் ஆகியோரை கொலை செய்வதற்கு கொலைகாரன் ஒருவனை நியமித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
நான் ஒருவரிடம் பேசியுள்ளேன்,நான் கொலைசெய்யப்பட்டால், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அவரது மனைவி சபாநாயகர் ஆகியோரை கொலை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்,இது வேடிக்கையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்
அவர்களை கொலை செய்யும்வரை ஓயவேண்டாம் என நான் கேட்டுக்கொண்டுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக செயற்படுவது எப்படி என தெரியாத ஒருவரால் பொய் சொல்பவரால் நாங்கள் நரகத்தை நோக்கி இழுத்துச்செல்லப்படுகின்றோம் என பிலிப்பைன்சின் துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த அச்சுறுத்தல் குறித்து பாதுகாப்பு பேரவை ஆராயும் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிரான அனைத்து அச்சுறுத்தல்கள் குறித்தும் ஆராயப்படும் இது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை துணைஜனாதிபதியின் இந்த கருத்தினை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதி சரா டட்டெர்டேயும் ஜனாதிபதி பேர்டினன்ட் மார்கோசும் ஒருகாலத்தில் அரசியல் சகாக்களாக விளங்கியவர்கள் இருவரும் 2022 இல் மக்கள் ஆணையை வென்று இரு முக்கிய பதவிகளையும் பொறுப்பேற்றனர்.
எனினும் வெளிவிவகார கொள்கை முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டெர்டேயின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம் போன்றவை குறித்து எழுந்த கருத்துவேறுபாட்டினால் இந்த கூட்டணி இந்த வருடம் வீழ்ச்சியடைந்தது.
முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டெர்டேயின் மகளான துணை ஜனாதிபதி அமைச்சரவையிலிருந்து விலகியுள்ள போதிலும் தொடர்ந்தும் துணை ஜனாதிபதியாக பதவி வகிக்கி;ன்றார்.

