ஒருகொடவத்தையில் இளைஞன் கொலை ; நால்வர் கைது

151 0

கொழும்பு , கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒருகொடவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்றைய தினம் அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் கொழும்பு வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஆவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சம்பவத்தன்று கொலை செய்யப்பட்டவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்கள் சிலர் அங்கிருந்தவர்களைக் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலின் போது கொலை செய்யப்பட்ட இளைஞனும் 16 வயதுடைய சிறுவன் ஒருவனும் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் 02 வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு வெல்லம்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும்  31, 32 மற்றும் 36 வயதுடையவர்கள் ஆவர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.