35ஆவது அகவை நிறைவுகண்ட தமிழாலயம் நொய்ஸ்

188 0

தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் நொய்ஸ் தமிழாலயத்தின் 35ஆவது அகவை நிறைவுவிழா கடந்த 12.10.2024 சனிக்கிழமை காலை 11:00 மணிக்கு நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக வருகைதந்தோரை தமிழினத்தின் பண்பாடு தழுவி மண்டபத்தினுள் அழைத்துவந்தனர்.

சிறப்பு விருந்தினர்களான குமுக சனநாயகக் கட்சியின் நொய்ஸ் நகர அணித் தலைவர் திருமதி றோஸ்மரி பிராங்கன் வையேர்ஸ், நொய்ஸ் நகரப் கலாசாரப் பணியக மேலாளர் முனைவர் திரு. பெஞ்சமின் றைசன்பேர்க்கர், நொய்ஸ் நகரப் பல்காலாசார அமைப்பின் பேச்சாளர் திரு டெனிஸ் எல்பீர், குமுக சனநாயகக் கட்சியின் நொய்ஸ் நகரசபை உறுப்பினர் திருமதி சுசானெ கிறேவெ கென்னெ, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மன் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், த.ஒ.கு மத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு சின்னையா நாகேஸ்வரன், தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. தர்மலிங்கம் இராஜகுமாரன், தமிழ்க் கல்விக் கழகக் கல்வி மற்றும் தமிழ்த்திறன் பிரிவுப் பொறுப்பாளர் “தழிழ்த்திறனாளன்” திரு. இராஜதுரை மனோகரன், தமிழ்க் கல்விக் கழகக் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி, மத்திய மாநிலச் செயற்பாட்டாளர் திரு. செல்லர் தெய்வேந்திரம் ஆகியோரால் மங்கல விளக்கு ஏற்றப்பட்டதையடுத்து அகவணக்கம், தமிழாலயகீதம் என்பவற்றைத் தொடர்ந்து 35ஆவது அகவை நிறைவுவிழா அரங்க நிகழ்வுகள் தொடங்கின.

அரங்கிலே கலை நிகழ்வுகள் முத்தமிழால் நகர்த்திச் செல்ல, அகவை நிறைவு விழாவின் சிறப்பம்சமாகச் சிறப்பு நிழற்படத்தொகுப்பு வெளியீடு இடம்பெற்றது. விளக்குகள் ஒளியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஒன்றிணைந்து சிறப்பு வெளியீட்டை அரங்கிற்கு எடுத்துவர, தமிழ்க் கல்விக் கழகக் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்கள் வெளியிட்டு வைக்க முதற்பிரதியைத் திருமதி மாலா பகீரதன் அவர்கள் பெற்றுக்கொண்டார். வெளியீட்டுரையை காஸ்ற் தமிழாலயத்தின் முன்னாள் நிர்வாகியான திரு. சின்னத்துரை நடராசா அவர்கள் வழங்கினார். முதன்மை மற்றும் சிறப்பு விருந்தினர்கள், பெற்றோர்கள், சக தமிழாலயங்களின் வருகையாளர்கள் மற்றும் நலன்விரும்பிகளென அனைவருக்கும் சிறப்புமலர் வழங்கப்பட்டது. தமிழாலயத்தின் முன்னாள் ஆசிரியர்கள், ஆண்டு 12வரை கற்றலை நிறைவு செய்த மாணவர்கள் மற்றும் தமிழாலயத்தில் தற்போது கற்றுவரும் மாணவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் பெற்றோர் பிரதிநிதிகள், நடன ஆசிரியர்கள் ஆகியோருக்கும் மதிப்பளிப்புகள் இடம்பெற்றன.

ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பினை தமிழ்க் கல்விக் கழகக் கல்வி மற்றும் தமிழ்த்திறன் பிரிவுப் பொறுப்பாளர் “தழிழ்த்திறனாளன்” திரு. இராஜதுரை மனோகரன் அவர்கள் வாழ்த்தி வழங்கி வைத்தார். கலைநிகழ்வுகள் முத்தமிழ் அரங்காக விரிந்தன. கலைநிகழ்வுகளின் தொடராக “தமிழராய் எழுந்து நில்” என்ற எழுச்சிகரமான நாடகம் தாயகத்தின் சமகால நிகழ்வுகளைப் பதிவு செய்தது. இறுதிவரை பார்வையாளர்கள் தமிழோடு ஒன்றிடத் தமிழர் தாகத்தை அடையும் இலக்கு நோக்கிய நம்பிக்கையோடு தமிழர் தாகம் சுமந்த பாடலை எல்லோரும் இணைந்து பாடிட நொய்ஸ் தமிழாலயத்தின் 35ஆவது அகவை நிறைவுவிழா சிறப்புடன் நிறைவுற்றது.