தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்!

74 0

தேர்தல் கண்காணிப்பாளர்கள் தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகத்திற்கு விஜயம் செய்திருக்கிறார்கள். அந்த அலுவலகம் ஏனைய வேட்பாளர்களின் தேர்தல் அலுஐரோப்பிய ஒன்றியவலகங்களைப் போல பகட்டாக, அட்டகாசமாக இருக்கவில்லை. அங்கே பிரம்மாண்டமான போஸ்டர்கள், பதாகைகள் எவையும் இருக்கவில்லை.பொது வேட்பாளரின் ஒரே ஒரு சுவரொட்டி மட்டும் இருந்தது. அதுவும் வீட்டுக்குள்ளே ஒரு குளிரூட்டியில் ஒட்டப்பட்டிருந்தது.அந்தச் சுவரொட்டி யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஒட்டப்படுகின்ற எல்லாச் சுவரொட்டிகளை விடவும் எளிமையானது; சிறியது; கவர்ச்சி குறைந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தம்மைச் சந்தித்த மக்கள் அமைப்பினரிடம் கேட்டார்கள், “உங்களுடைய பொது வேட்பாளரைப் பற்றிக் கதைக்கும் பொழுது உங்களுடைய அரசியல்வாதிகளும் கட்சித் தலைவர்களும் பொது நிலைப்பாடு, பொதுக் கொள்கை என்றுதான் உரையாடுகிறார்கள்.ஒரு நபராக அவரைப்பற்றி உரையாடுவது குறைவாக இருக்கிறதே, ஏன்?” என்று

அக்கேள்வி சரியானது.தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூர்மையாக அவதானித்துள்ளனர். பொது வேட்பாளர் ஒரு குறியீடு.அவர் தமிழ்ப் பொது நிலைப்பாட்டின் குறியீடு.இங்கு தமிழ்ப் பொது நிலைப்பாடுதான் முக்கியம்.அதை முன்னிறுத்தும் நபர் அல்ல.ஏற்கனவே தமிழ் அரசியலில் அப்படி ஒரு பாரம்பரியம் இருந்து. கொள்கைக்காக நபர்களை முன்னிறுத்தாத ஒரு பாரம்பரியம். கொள்கைக்காக நபர்கள் தங்களைத் திரை மறைவில் வைத்துக்கொண்ட ஒரு பாரம்பரியம்.கொள்கைக்காக தனிப்பட்ட சுகங்களையும் தனிப்பட்ட புகழையும் தியாகம் செய்யும் ஓர் அரசியல் பாரம்பரியம். அரியநேத்திரன் அந்த பாரம்பரியத்தின் அடிப்படையில், தன்னை முன்நிறுத்தாமல் தான் முன்னிறுத்தும் கொள்கையை முன் நிறுத்துகின்றார்.

தமிழ்ப் பொது வேட்பாளருக்குரிய பிரச்சார செலவுகளை பற்றியும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கேட்டிருக்கிறார்கள். பெருமளவுக்குத் தன்னியல்பாக, தன் எழுச்சியாக மக்கள் செலவு செய்வதைக் குறித்து அங்கே கூறப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவின் தேர்தல் வரலாற்றில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடையம் பல்வேறு பரிமாணங்களில் புதுமையானது வித்தியாசமானது.

முதலாவதாக,பொது வேட்பாளர் என்ற நபரை முன்னுறுத்தி பிரச்சாரங்கள் செய்யப்படுவது குறைவு. ஒரு பொது நிலைப்பாடு ஆகிய “தேசமாகத் திரள்வது” என்றுதான் பெரும்பாலான பிரச்சாரங்களில் கூறப்படுகின்றது. தன் முனைப்போடு வேட்பாளர்கள் தங்களை முன்னுறுத்தி, தங்களுடைய முகத்தை முன்னிறுத்தி, தங்களுடைய புகழை முன்னிறுத்தி, வாக்குக் கேட்கும் ஒரு பாரம்பரியத்தில் தன்னை முன்னிறுத்தாத அதாவது ஒரு ஆளை முன்னுறுத்தாத, அதேசமயம் கொள்கையை முன்னிறுத்தும்,ஒரு தெரிவுதான் பொது வேட்பாளர்.

இரண்டாவது, ஏனைய வேட்பாளர்களோடு ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவு பணம் செலவழிக்கப்படும் பிரச்சார நடவடிக்கை பொது வேட்பாளருடையதுதான். பொது வேட்பாளருக்காக பிரசுரிக்கப்படும் துண்டுப் பிரசுரங்கள் சுவரொட்டிகள் போன்றவை ஒப்பீட்டளவில் மலிவானவை, செலவு குறைந்தவை.இடதுசாரி மரபில் வந்த ஜேவிபி அட்டகாசமான சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றது.அந்தச் சுவரொட்டிகள் விலை கூடியவை,அளவால் பெரியவை.பொது வேட்பாளரின் சுவரொட்டிகள் அதற்குக் கிட்ட வர முடியாத அளவுக்கு சிறியவை, மலிவானவை.

யாழ்ப்பாணத்தில் ஒரு பல வர்ணச் சுவரொட்டி, ஆனால் மலிவான விலையில் அடித்தால், குறைந்தது 12 ரூபாய்கள் தேவை. ஆனால் அதை ஒட்டுவதற்கு கொடுக்கப்படும் செலவு அதைவிட அதிகம் என்று கட்சிகள் கூறுகின்றன. ஒரு சுவரொட்டி ஒட்டுவதற்கு சில சமயம் ஆகக்கூடியது 15 ரூபாய் தேவைப்படுகிறது.என்று ஒரு கட்சித் தொண்டர் சொன்னார்.ஒட்டும் ஆட்களுக்கு சாப்பாடு, பயணச் செலவு போன்ற எல்லாச் செலவுகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், சுவரொட்டியை விட அதை ஒட்டும் செலவு அதிகமாக இருக்கும் ஒரு தேர்தல் களம் இது.

மூன்றாவது,வேறுபாடு, எனைய பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எல்லா மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான அலுவலகங்கள் உண்டு. ஆனால் தமிழ் பொது வேட்பாளருக்கு மிகச்சில அலுவலகங்கள்தான் உண்டு.தென் இலங்கையில் இருந்து வந்த ஒரு ஊடக முதலாளி சொன்னார், “கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்த போது, சாலை நெடுக ஜேவிபியின் அலுவலகங்களை அல்லது விளம்பரத் தட்டிகளைக் காணக்கூடியதாக இருந்தது” என்று. “அவர்கள் மூடப்பட்ட ஒரு கடையின் முகப்பில் தங்களுடைய கட்சிக் கொடியை பறக்க விடுகிறார்கள்.அல்லது கட்சிப் பதாதையைத் தொங்க விடுகிறார்கள். தாங்கள் எங்கும் நிறைந்து இருக்கிறோம் என்ற ஒரு தோற்றத்தை, உணர்வை ஏற்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றார்கள்.”என்று. அதற்கு வேண்டிய வளம் அவர்களிடம் உண்டு. ஆளணி, நிதி போன்ற அனைத்தும் அவர்களுக்கு உண்டு.

சஜித் பிரேமதாசவும் அப்படித்தான். நிறையக் காசு செலவழிக்கிறார். ரணில் ஜனாதிபதியாக இருப்பவர்.சொல்லவா வேண்டும்? எல்லாருமே கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்து வருகிறார்கள். வெற்றிக்காக எத்தனை கோடியை செலவிடவும் அவர்கள் தயார்.ஆனால் பொது வேட்பாளர் அப்படியல்ல.அவரிடம் அந்த அளவுக்குக் காசு கிடையாது. தன்னார்வமாக, தன்னெழுச்சியாக தமிழ் மக்கள் அவருக்காக பிரச்சாரம் செய்கின்றார்கள். கூட்டங்களை ஒழுங்கமைக்கின்றார்கள். உள்ளூர் வர்த்தகர்கள் கூட்டங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்கின்றார்கள். புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகள் உதவிகளை செய்கின்றார்கள்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இத்தேர்தல் ஒப்பீட்டளவில் அதிகம் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.புலம் பெயர்ந்த தமிழர்கள் கடந்த 15 ஆண்டுகளில் ஒப்பீட்டளவில் அதிகளவு ஒருங்கிணைந்த ஒரு புள்ளியாகவும் அது மாறியிருக்கிறது. பலர் தன்னார்வமாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்கள். தமது ஊர் சங்கங்களுக்கு உதவிகளைச் செய்கின்றார்கள்.பொது வேட்பாளர் தாயகத்தையும் டயஸ்போராவையும் ஒப்பீட்டளவில் ஒன்றாக்கியிருக்கிறார்.

தமிழ்ப் பொது வேட்பாளரின் பிரதான பிரச்சாரக் கோஷம் “நாமே நமக்காக” என்பதாகும். அதாவது தமிழ் மக்கள் தங்களுக்கு தாங்களே பிரச்சாரம் செய்து கொள்வது. பொது வேட்பாளருக்காக ஒவ்வொரு தமிழரும் பிரச்சாரம் செய்வது. ஏனென்றால் அது தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டி எழுப்பும் ஒரு பிரச்சாரக் களம்.

நாலாவது பிரதான வேறுபாடு, தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்காக போட்டியிடவில்லை. அவர் ஜனாதிபதியாக வர முடியாது.ஏனென்றால் ஒரு தமிழ் குடிமகன் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக வருமளவுக்கு ஸ்ரீலங்காவின் ஜனநாயகம் செழிப்பானது அல்ல. அரிய நேத்திரன் ஜனாதிபதியாக வரும் கனவோடு தேர்தலில் குதிக்கவில்லை.மாறாக தேசத்தைக் கட்டி எழுப்பும் கனவோடுதான் அவர் ஒரு குறியீடாக தேர்தலில் நிற்கின்றார்.எனவே ஏனைய எல்லா வேட்பாளர்களை விடவும் தமிழ்ப் பொது வேட்பாளர் வேறுபடும் முக்கியமான இடம் இது.அவர் ஒரு குறியீடு என்பது.

தமிழ்ப் பொது வேட்பாளரைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் வித்தியாசமானது. முன்னுதாரணம் இல்லாதது. தான் வெல்ல முடியாத ஒரு தேர்தலில் ஒரு குறியீடாக நிற்பது என்பது முன்னப்பொழுதும் இல்லாதது.ஒரு பொது நலனுக்காக தன்னை ஒரு குறியீடாக்கி தேர்தலை நிற்பது என்பது முன்னப்பொழுதும் நிகழாதது.

மேற்கண்ட பிரதான வேறுபாடுகளைத் தொகுத்துப் பார்த்தால் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அதிகம் படைப்புத்திறன் மிக்கதாகவும், அரசியலில் செயலூக்கம் மிக்க ஒரு தெரிவாகவும், இந்தப் பிராந்தியத்தில் ஒரு புதிய முன்னுதாரணம் ஆகவும் காணப்படுகின்றது.

நிலாந்தன்