வருமான வரி தாக்கலை அதிகரிக்க பாகிஸ்தானில் 5 லட்சம் பயனர்களின் சிம் கார்டுகளை முடக்க திட்டம்

21 0

சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களின் சிம் கார்டுகளை முடக்க திட்டமிட்டுள்ளது அந்த நாட்டின் மத்திய வருவாய் வாரியம். நாட்டு மக்களிடையே வருமான வரி தாக்கலை அதிகரிக்க செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது.

அதன்படி சுமார் 5,06,671 பயனர்களின் சிம் கார்டுகள் முடக்கப்பட உள்ளது. இது தொடர்பான விவரத்தை வருமான வரி பொது உத்தரவு மூலம் மத்திய வருவாய் வாரியம் வெளியிட்டுள்ளது. இதனை உடனடியாக செயல்படுத்தும் வகையில் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் மற்றும் சிம் கார்டுகளை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.வருமான வரி கணக்கு விவரங்களை மக்கள் தாக்கல் செய்யும் பட்சத்தில் சிம் கார்டுகள் தானாகவே செயல்பாட்டுக்கு திரும்பும் எனவும் வருவாய் வாரியம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை தோறும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்த நிகழ் நேர பட்டியல் அப்டேட் செய்யப்படும் என்றும்.

அந்த பட்டியலில் இடம் பெறும் நபர்களின் விவரங்கள் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் மற்றும் டெலிகாம் நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிம் கார்டுகள் மீண்டும் ஆக்டிவேட் செய்யப்படும் என விளக்கம் தரப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 1-ம் தேதி வரையில் சுமார் 42 லட்சம் பேர், தங்களது வருமான வரி கணக்கை அந்த நாட்டில் தாக்கல் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம் என தெரிகிறது. இதே காலகட்டத்தில் கடந்த 2022-ல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 59 லட்சமாக இருந்துள்ளது.

மக்கள் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையிலும், வரி தாக்கலை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதனால், உணவு, மருந்து, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் தீவிரமாக காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.