பொதுமக்களின் எதிர்ப்பை மீறி திருவேற்காட்டில் கூவம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கணக்கெடுப்பு

27 0

பொதுமக்களின் எதிர்ப்பை மீறி திருவேற்காடு பகுதியில் கூவம் கரையை ஆக்கிரமித்துள்ள குடியிருப்புகளை அகற்றுவதற்கு ஏதுவாக அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு- பெருமாள் கோயில் தெருபகுதியில் கூவம் கரையை ஆக்கிர மித்து, சுமார் 160 குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மழைக் காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் வருவாய்த் துறை மற்றும் நீர்வள ஆதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, திருவள்ளூர் கோட்டாட்சி யர் கற்பகம் தலைமையில் பூந்தமல்லி வட்டாட்சியர் கோவிந்தராஜ் உள்ளிட்ட வருவாய்த் துறை மற்றும் நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை கணக்கெடுக்கும் பணிக்காக நேற்று திருவேற்காடு- பெருமாள் கோயில் தெரு பகுதிக்கு வந்தனர்.

அதிகாரிகளுடன் வாக்குவாதம்: இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டதோடு, வீடுகளை அகற்றுவது குறித்த நீதிமன்ற உத்தரவு நகலை கேட்டனர்.

அதற்கு இணையதளத்தில் பதிவிறக்கம்செய்து கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் கூறியதால், பொதுமக்கள் ஆத்திரமடைந்து, அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சில மணி நேரம் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அப் போது அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர்.

தகவல் அறிந்து, திருவேற்காடு நகராட்சி தலைவர் என்.இ.கே‌.மூர்த்தி, துணைத்தலைவர் ஆனந்தி ரமேஷ் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

ஆனால், ஆக்கிரமிப்பாளர் களுக்கு மாற்று குடியிருப்பு வழங்கஏதுவாக அவர்களின் விபரங்களை கேட்ட அதிகாரிகளிடம், பெரும்பா லான ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள்விபரங்களை அளிக்க மறுத்துவிட்ட னர்.

இதையடுத்து, பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, ஆக்கிரமிக்கப்பட்ட குடியிருப்புகளை கணக்கெடுத்து அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.