பிரான்சு பாரிசில் பல்லின சமூகத்தவர்களோடு எழுச்சிகொண்ட தமிழர்களின் மே தினப் பேரணி!

35 0

பிரான்சில் தமிழீழ தேசமக்களாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மே 1 தொழிலாளர் நாள் பேரணி Republique பகுதியில் இருந்து மதியம் 14.00 மணிக்கு ஆரம்பமாகியது. தமிழீழத் தேசியத்தலைவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியின் மத்தியில் தமிழீழக்கொடிகளைக் கைகளில் ஏந்திய தமிழீழ மக்களும் உணர்வாளர்களும் சிங்கள பெளத்த பேரினவாதம் தொடர்ந்தும் 75 ஆண்டுகளாக திட்டமிட்ட வகையில் அனைத்து வழிகளிலும் மேற்கொண்டுவரும் தமிழின அழிப்பை வெளிப்படுத்திய படங்கள் மற்றும் பிரெஞ்சு மொழியிலான சுலோகங்களையும் தாங்கியவாறு பேரணியில் உணர்வோடு கலந்துகொண்டனர்.

இதேவேளை பல்லினமக்களும் தமது கோரிக்கைகள் அடங்கிய விடயங்களை பல்வேறு கலை வடிவங்களில் ஆற்றுகைப்படுத்தியதையும் காணமுடிந்தது எமது தமிழ் இளையோரும் தமிழீழத்தேசியக்கொடிகளை ஏந்தியவாறு உணர்வோடு அவர்களுக்கு‌ மத்தியில் எழுப்பியிருந்தனர். தமிழீழ எழுச்சி கானங்கள் பல்லின மக்களையும் உணர்வு பொங்கவைத்தமையும் குறிப்பிடத்தக்கது. சிறுசிறு அசம்பாவிதங்கள் இடம்பெற்ற போதும் அவற்றுக்கு மத்தியில் பிரெஞ்சுக் காவல்துறையினர் கடும் பாதுகாப்பினை வழங்கியிருந்தனர்.

மாலை 16.30 மணியளவில் பேரணியானது Bastille பகுதியை சென்றடைந்தது. அங்கு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் பேரணிகுறித்து உரையாற்றியிருந்தார். எதிர்வரும் மே 18 பேரணியில் நாம் கலந்துகொள்ளவேண்டும் என்பதையும் நினைவுகூர்ந்திருந்தார். தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் பேரணி நிறைவடைந்தது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடகப்பிரிவு)