மாணவர்களின் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல

24 0

மாணவர் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல உணவு முறையில் மாற்றம் ஏற்பட வேண்டியது  அவசியம் என வேலணை பிரதேச செயலாளர் சிவகரன் வலியுறுத்தியுள்ளார்.

கல்வி மட்டும் ஒரு பிள்ளைக்கு ஆரோக்கியமான வாழ் நிலை மட்டத்தை கொடுத்துவிடாது. கல்வியுடன் விளையாட்டும் இணைந்தே அந்தப் பிள்ளையை பூரணமடைந்தவனாக உருவாக்குகின்றது என சுட்டிக்காட்டிய தீவகம் தெற்கு வேலணை பிரதேச செயலாளர் கைலாயபிள்ளை சிவகரன் போசாக்கு மட்டமே ஒரு பிள்ளையின் கல்வியையும் விளையாட்டு துறையையும் நிர்ணயிக்கின்றது என்றும் சுட்டிக்காடியுள்ளார்.

வேலணை மத்திய கல்லுரியின் வருடாந்த விளையாட்டு திறமை காண் நிகழ்வு பாடசாலையின் முதல்வர் அன்ரன் ரோய் தலைமையில் கடந்த 30.04.2024 செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி சிறப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

வேலணைப் பிரதேசத்தின் மாணவர் மத்தியிலான போசாக்கின்மைக்கு வறுமை ஒருபோதும் காரணமாக இருக்காது. அவர்கள் உண்ணும் உணவின் தரங்கள் அல்லது பழக்கங்கள் தான் அதற்கு முழுமையான காரணமாகின்றது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நிலைக்கு பெற்றோரே முக்கிய பொறுப்பானவர்களாகவும் இருக்கின்றனர். ஏனெனில் இப்பிரதேசத்தின் மாணவர் இடையே போசாக்கு மட்டத்தை அறிந்து கொள்ளும் வகையில் பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளியான தகவல் எம்மை ஆச்சரியமடைய செய்துள்ளது.

குறிப்பாக அந்த ஆய்வின்படி பாதிக்கப்பட்ட 90 வீதத்துக்கும் அதிகமான பிள்ளைகளின் பெற்றோர் வறுமைக்கோடின் கீழ் அல்லாத நிரந்தர வருமானம் கொண்டவர்களாகவும் பணம் படைத்தவர்களாகவுமே இருந்துள்ளனர். குறித்த ஆய்வின் பெறுபேறுகளுக்கமைய அவர்களது உணவுப் பழக்கவழக்கங்களே இந்த நிலைக்கு முக்கிய காரணமாகியுள்ளதை அறிய முடிந்தது.

இதனடிப்படையில் பணம் இருக்கின்றது என்பதற்காக ஆடம்பரமான ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதால் பயனில்லை என்பதும் உறுதியாகியுள்ளது. அத்துடன் பிள்ளைகளின் ஆரோக்கியத்தை வளர்க்க பெற்றோர் தமது அவசர உணவு பழக்க வளக்கத்தில் மாற்றத்தை கொண்டுவருவதும் அவசியமாக உள்ளது.

அந்தவகையில் பிள்ளைகளின் கல்வித் தரநிலையையும் விளையாட்டு உள்ளிட்ட ஏனைய செயற்பாடுகளையும் ஆரோக்கியமான உடற்கட்டமைப்பையும் நிர்ணயிப்பது ஊட்டச்சத்துள்ள உணவுப் பழக்க வழக்கமாகவே உள்ளது.

அதனடிப்படையில் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் ஒவ்வொரு பிள்ளைகளினதும் பெற்றோர் முழுமையான பங்கெடுப்பது அவசியம்.

இதே நேரம் விளையாட்டை விளையாட்டாக விளையாடுவதும் அவசியம் . அதே நேரம் விளையாட்டை விளையாட்டாக விளையாடாதிருப்பதும் அவசியமானது அந்தவகையில் இந்த விளையாட்டு திறமைகாண் நிகழ்வானது வெற்றி பெறுவதற்காக மடுமல்ல கூட்டிணைந்த உறவுகளுடன் கூடிய சிறந்த மனப்பாங்கையும் உருவாக்கிக் கொள்ளும் களமாக  அமைந்துள்ளது என்றும்   தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.