போலி தொலைபேசி அ​ழைப்பு தொடர்பில் PHI எச்சரிக்கை

14 0

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் பெறும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

பொது சுகாதார பரிசோதகர்கள் என கூறிக்கொண்டு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு பணம் வழங்குவதை தவிர்க்குமாறு உபுல் ரோஹன, வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“நட்சத்திர ஹோட்டல்களுக்குக் கூட தொலைபேசி அழைப்பெடுத்து வலய பொது சுகாதார பரிசோதகர் போல் நடித்து பணம் கேட்கின்றனர். சில தொழிலதிபர்களை ஏமாற்றி பணம் வசூலித்த முறைப்பாடுகள் ஏராளம். சமீபகாலமாக பொலிஸ் நிலையங்களில் ஏராளமான முறைப்பாடுகள் வந்துள்ளன. எனவே இது போன்ற தொலைபேசி அழைப்புக்கள் ஏதும் வந்தால் பணம் வழங்குவதை தவிர்த்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடவும்” என்றார்