தி.மலையில் தனியார் அறக்கட்டளை நிர்வாகம் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கல்வி நிறுவனம் கட்டியுள்ளதா?

17 0

திருவண்ணாமலை மாத்தூரில் தனியார் அறக்கட்டளை நிர்வாகம், நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கல்வி நிறுவனங்களை கட்டியுள்ளதா என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவண்ணாமலையைச் சேர்ந்த டி.எஸ்.சங்கர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:

அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி ஜீவா நிர்வகித்து வரும் திருவண்ணாமலை சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளை நிர்வாகம், மாத்தூரில் உள்ள நீர்நிலை புறம்போக்கு மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை சில தனி நபர்களிடம் விலைக்கு வாங்கியுள்ளதாக கூறி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, தங்களது பெயரில் பட்டாவும் பெற்றுள்ளது. அந்த நிலங்களில் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களையும் கட்டியுள்ளனர். இதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமமும் அனுமதி அளித்துள்ளது.

அரசியல் அதிகாரம்: அரசியல் ரீதியாக அதிகாரம் படைத்தவர்கள் இந்த கல்வி அறக்கட்டளையை நிர்வகித்து வருவதால் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டிய கல்வி அறக்கட்டளை நிர்வாகமே நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருப்பது ஏற்புடையதல்ல.

எனவே, இந்த அறக்கட்டளை நிர்வாகம் நடத்தி வரும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுஉள்ள அனுமதியை ரத்து செய்ய மத்திய கல்வி அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை மீட்க தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.உமா மகேஸ்வரி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் குற்றம் சாட்டியுள்ள தனியார் அறக்கட்டளை நிர்வாகம், நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கல்வி நிறுவனங்களை கட்டியுள்ளதா என்பது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜன.31-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.