வடக்குக்கு உதவுவோம் – உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் உறுதி

166 0

வடமாகாணத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு உலக வங்கி பூரண அனுசரணையை வழங்கும் என உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜெர்டே உறுதி அளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு கடந்த திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட உலகவங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜெர்டே உள்ளிட்ட குழுவினர் வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ சந்தித்து கலந்துரையாடினார்கள்.

அதன் போது, வடக்கு மாகாண ஆளுநர், வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தினார்,

அத்துடன் வடமாகாணத்தில் எவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பிலும், கல்வி, சுயதொழில் உட்கட்டமைப்பு மற்றும் சிறுவர், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவத்திற்கு ஆதரவளிக்குமாறும் உலக வங்கி பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இவற்றைக் கேட்டறிந்த உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து தாம் மிகவும் கவனத்தில் கொள்வதாகவும், அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுக்கு தாம் கைகொடுப்பதாகவும் கூறியிருந்தார்.

அத்துடன்  வடமாகாணத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு உலக வங்கி பூரண அனுசரணையை வழங்கும் எனவும் தெரிவித்தார்.