ஐரோப்பிய நாடுகளில் இராஜதந்திர ரீதியிலான சந்திப்புக்களை மேற்க்கொண்டுவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி.

292 0

ஐரோப்பிய நாடுகளில் இராஜதந்திர ரீதியிலான சந்திப்புக்களை மேற்க்கொண்டுவரும் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளருமாகிய
திரு. செல்வராஜா கஜேந்திரன் அவர்கள்.

ஐநா மனித உரிமைகள் அவையின் கூட்டத் தொடர்களில் பங்குபற்றுவதற்காக சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்திருந்த திரு. செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் கடந்த 30.09.2023 அன்று யேர்மனிக்கு வருகைதந்து டோட்முன்ட் (Dortmund) நகரிலும் நெற்றற்ரால் (nettetal) நகரிலும் தாயகத்தின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார். தொடர்ந்து 01.10.2023 அன்று லூடன்சைட் (lüdenscheid) நகரிலும், சார்பெக் (saerbeck) நகரிலும் 02.10.2023 அன்று ஒஸ்னாபுறுக் (Osnabruck) நகரிலும் பெருந்தொகையான தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடாத்தியிருந்தார்.

03.10.2023 யேர்மனியின் வூப்பற்ரால் (Wuppertal) நகரில் நடைபெற்ற இளையோர் அரசியல் ஆய்வரங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியிருந்தார்.
தொடர்ந்து திரு. செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் இத்தாலி, நெதர்லண்ட், டென்மார்க், பிரான்ஸ், போன்ற நாடுகளுக்கு பயணத்தினை மேற்கொண்டு அந்தந்த நாடுகளினது அரசியல் சார்ந்த இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடியதோடு, தமிழ் மக்களுக்கான சந்திப்புக்களையும் மேற்கொண்டிருந்தார். மீண்டும் 26.10.2023 அன்று யேர்மனிக்கு வருகைதந்திருந்த திரு. செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் யேர்மன் இடதுசாரிக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய KATHRIN VOGLER அவர்களுடைய உத்தியோகபூர்வ அலுவலகத்தில் அக்கட்சியின் செயலாளர் திரு. SASCHA WAGNER அவர்களையும், ஊடகப்பொறுப்பாளர் திரு. HENNING VON STOLZENBERG அவர்களையும் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார். ஈழத் தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணை அவசியம் என்பதனை சுட்டிக் காட்டியதோடு தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழர்கள் மீதான கட்டமைப்பு சார் இன அழிப்பு பற்றியும் எடுத்து விளக்கியிருந்தார். அத்தோடு யேர்மன் போன்ற நாடுகளினால் வழங்கப்படும் அபிவிருத்திக்கான பண உதவிகள் தமிழர் வாழும் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதற்கே பயன்படுகின்றது என்பதனையும் ஆதாரங்களோடு எடுத்துரைத்தார். நிறைவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. செல்வராஜா கஜேந்திரன் அவர்களது கோரிக்கைகளை யேர்மன் பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்வதோடு, யேர்மனிய ஊடகங்களின் கவனத்திற்கும் கொண்டுவருவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.

27.10.2023 அன்று Amnesty international சார்பாக யேர்மன் மத்திய மாநிலத்தின் பிரதிநிதியாகிய திருமதி. Andrea-cora walther அவர்களோடும் அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில்
திரு. செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார். ஸ்ரீலங்கா அரசினது மனித உரிமை மீறல்கள் தொடர்பாக Amnesty international தொடர்ச்சியாக வெளியிட்ட அறிக்கைகள், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மன ஆறுதல் வழங்கியது என்பதனைக் குறிப்பிட்டு, தமிழ் மக்கள் சார்பாக தனது நன்றியினை தெரிவித்த திரு. செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் போர் முடிவுற்று பதினான்கு ஆண்டுகள் கடந்த பின்பும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்புசார் இன அழிப்பு பற்றி ஆழமாக எடுத்து விளக்கினார். குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் ஸ்ரீலங்கா சிங்கள புலனாய்வு அதிகாரிகளினால் திட்டமிட்டு தன்மீது நாடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஆதாரத்தோடு விளக்கியிருந்தார். நிறைவாக “ஒரு பாராளுமன்ற உறுப்பினராக்கிய எனக்கே இவ்வாறான நிலையெனில் சாதாரண தமிழ் மக்களின் நிலை எவ்வாறு இருக்கும்” என்பதனை சிந்தித்து தொடர்ந்தும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டதோடு மேலும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் ஆதாரங்களோடு தெளிவுபடுத்தியிருந்தார்.