உலகக் கிண்ண ரக்பி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு 8 நாடுகள் முன்னேறியுள்ளன

138 0

உலகக் கிண்ண ரக்பி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு நடப்பு சம்பியனான தென் ஆபிரிக்கா, போட்டி ஏற்பாடு நாடான பிரான்ஸ் உள்ளிட்ட இங்கிலாந்து, வேல்ஸ், ஆர்ஜென்டீனா, அயர்லாந்து, நியூஸிலாந்து மற்றும் பிஜி ஆகிய 8 நாடுகள் முன்னேறியுள்ளன.

டி குழுவுக்கான லீக் சுற்றில் ஆர்ஜென்டீனாவுடனான தீர்மானமிக்க போட்டியில் ஒரேயொரு ஆசிய நாடாக பங்கேற்றிருந்த ஜப்பான் 27 க்கு 39 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியைத் தழுவியிருந்தமையால் காலிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

கடந்த செப்டெம்பர் 8 ஆம் திகதியன்று பிரான்ஸில் ஆரம்பமான உலகக் கிண்ண ரக்பி போட்டித் தொடரில் ஏ,பீ,சீ,டீ ஆகிய 4 குழுக்களில் தலா 5 அணிகள் என்ற கணக்கில் 20 பங்கேற்றன.

இதில் குழு ஏ யில் பிரான்ஸ், நியூசிலாந்து, நமீபியா, இத்தாலி, உருகுவே ஆகிய அணிகளும், குழு பீ யில் தென் ஆபிரிக்கா, ஸ்‍கொட்லாந்து, டொங்கா, அயர்லாந்து, ருமேனியா ஆகிய அணிகளும் அங்கம் வகித்தன.

அத்துடன், குழு சீயில் அவுஸ்திரேலியா, பிஜீ, வேல்ஸ், ஜோர்ஜியா, போர்த்துக்கல் ஆகியனவும், குழு டீல் ஜப்பான், ஆர்ஜென்டீனா, இங்கிலாந்து, சிலி,சமாவோ ஆகியன இடம்பெற்றன.

தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்துள்ள ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்து சுற்றான காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதன்படி, ஏ குழுவிலிருந்து பிரான்ஸ் (18 புள்ளிகள்) மற்றும் நியூஸிலாந்தும் (15 புள்ளிகள்), பீ குழுவிலிருந்து அயர்லாந்து (19 புள்ளிகள்) மற்றும் தென் ஆபிரிக்காவும் (15 புள்ளிகள்), சீ குழுவிலிருந்து வேல்ஸ் (19 புள்ளிகள்) மற்றும் பிஜீயும் (11 புள்ளிகள்), டீ குழுவிலிருந்து இங்கிலாந்து (18 புள்ளிகள்) மற்றும் ஆர்ஜென்டீனாவும் (14 புள்ளிகள்) முன்னேறின. இதில் குழு சீயில் பிஜீ, அவுஸ்திரேலிய ஆகிய அணிகள் தலா 11 புள்ளிகள் அடங்கலாக சம புள்ளிகளைப் பெற்றிருந்தபோதிலும் புள்ளிகள் வித்தியாச கணக்கில் பிஜீ (5) புள்ளிகளையும் அவுஸ்திரேலியா (-1) பெற்றிருந்த காரணத்தினால் பிஜீ அணி காலிறுதிக்கான தகுதியைப் பெற்றது.

ஏ,பீ,சீ,டீ ஆகிய ஒவ்வொரு குழுக்களிலிருந்தும் முறையே பிரான்ஸ், அயர்லாந்து, வேல்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகியன தத்தம் குழுக்களில் தோல்வியடைதாக அணியாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. காலிறுதிப் போட்டிகள் எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களில் நடைபெறவுள்ளன.