கூட்டு பொருளாதார சபையை அமைக்க ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு இலங்கை முன்மொழிவு

67 0

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக கூட்டு பொருளாதார சபையை அமைக்க ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திடம் இலங்கை முன்மொழிந்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான அமைச்சர் அஹமட் பின் அலி சயேக் அலரி மாளிகையில் சந்தித்த பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போதே பிரதமரால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம், எரிசக்தி மற்றும் சுற்றுலாத் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளுதல் மற்றும் இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடுகளை அதிகரிப்பதற்காக பொருளாதார கூட்டு பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைகளை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தூதுக்குழுவில் தூதர் காலித் நாசர் அல்-அமெரி, வெளியுறவு அமைச்சர் அலுவலக இயக்குனர் சுல்தான் அல் மன்சூரி மற்றும் பொருளாதார மற்றும் வணிக விவகாரங்கள் துறையின் துணை இயக்குனர் காடா அல் நபுல்சி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.