இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு – நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத்

200 0

பொருளாதார மீட்சி மற்றும் கடன் மறுசீரமைப்புக்காக இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு  முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுக்கு உறுதியளித்துள்ளார்.

அத்துடன் பொருளாதார மீட்சிக்காகவும்,இலங்கையில் நல்லாட்சியை ஸ்தாபிப்பதற்கும் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஐக்கிய இராச்சியத்தின் திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபட் கப்ரொதிற்கு எடுத்துரைத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபினாத்திற்கும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் மாலை மொரோக்கோ நாட்டில் மராகேஷ் நகரில் இடம்பெற்றது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாடு மொரோக்கோ நாட்டில் மராகேஷ் நகரில் இடம்பெறுகிறது.இந்த மாநாட்டில் இலங்கை சார்பில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க,மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க,திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.இந்த மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர்,சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கே.சுப்ரமணியம் மற்றும் உலக வங்கியின் தென்னாசிய வலயத்தின் உப தலைவர் மார்டின் ரய்ஸர் மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லான்ட் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பொருளாதார மீட்சிக்காக இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை வரவேற்றுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் கடன் மறுசீரமைப்புக்காக இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுக்கு உறுதியளித்துள்ளார்.

ஊழல் எதிர்ப்பு சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிர்வாக முறைமை அடையாளப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இச்சந்திப்பை தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தின் திறைசேரியின் பிரதி உதவிச் செயலாளர் ரொபட் கப்ரொதிற்கும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பொருளாதார மீட்சிக்காகவும்,இலங்கையில் நல்லாட்சியை ஸ்தாபிப்பதற்கும் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.பொருளாதார மீட்சிக்கும்,கடன் மறுசீரமைப்புக்கும் ஐக்கிய அமெரிக்க இராச்சியம் இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என திறைசேரியின் உதவி செயலாளர் ரொபட் கப்ரொத் உறுதியளித்துள்ளார்.