அரசியல்வாதிகள் முறையாக மின் கட்டணத்தை செலுத்தினால் மின்சாரசபை நட்டமடையாது – ஓமல்பே சோபித தேரர்

50 0

அரசியல்வாதிகளும் அவர்களின் உறவினர்களும் மின்சார கட்டணத்தை முறையாக செலுத்தினால் மின்சார சபை நட்டமடையாது, மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்கான நெருக்கடியான நிலை ஏற்படாது என மக்கள் பேரவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள மக்கள் பேரவை காரியாலயத்தில் திங்கட்கிழமை (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மழையுடனான காலநிலையால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் போதிய மழைவீழ்ச்சி இல்லாத காரணத்தால் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது.

தற்போதைய மின்கட்டண அதிகரிப்பால் நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மின்கட்டணத்தை அதிகரிக்குமாறு மின்சார சபை முன்வைத்த யோசனையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தற்போது பரிசீலனை செய்கிறது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எந்தளவுக்கு சுயாதீனமாக செயற்படும் என்பதும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சுயாதீன ஆணைக்குழுக்களில் அரசியல் தலையீடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

மின்சார சபையின் நட்டத்தை முகாமைத்துவம் செய்துக் கொள்வதற்காகவே மின்கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.போதிய மழை வீழ்ச்சி இல்லாத காரணத்தால் எதிர்பார்க்கப்பட்ட நீர்மின்னுற்பத்தி இலக்கை அடைய முடியவில்லை.750 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது.

அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் உறவினர்களின் மாதாந்த மின்கட்டணம் முறையாக அறவிடப்படுகிறதா,பல இலட்சம் ரூபா கணக்கில் மின்கட்டணத்தை செலுத்தாமல் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அரசியல்வாதிகள் முறையாக மின்கட்டணம் செலுத்தினால் மின்சார சபை நட்டமடையாது,மின்கட்டணத்தை அடிப்படி திருத்தம் செய்ய வேண்டிய தேவை ஏற்படாது.

அரசியல்வாதி ஒருவரின் திருமண நிகழ்வுக்கான மின்கட்டணத்தை நான்கு வருடத்துக்கு பிறகு பிறிதொரு அரசியல்வாதி நட்பு ரீதியாக செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சாதாரண பிரஜையொருவர் மின்கட்டணத்தை செலுத்தாவிடின் உடனடியாக அவருக்கான மின்விநியோகத்தை துண்டிக்கும் மின்சார சபை அரசியல்வாதி ஒருவர் சுமார்  26 இலட்சம் ரூபா மின்கட்டணத்தை சுமார் நான்கு ஆண்டுகள் செலுத்தாமல் இருந்த போது அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.இவ்வாறான முறைகேடுகளை தவிர்த்தால் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடையலாம் என்றார்.