மீத்தேன் திட்டத்திற்கு மீண்டும் அனுமதி அளிப்பதா?: பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

245 0

விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன் திட்டத்திற்கு மீண்டும் அனுமதி அளிக்க முடிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்று பி.ஆர்.பாண்டியன் கூறி உள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரண தொகையை, தமிழக அரசு அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளது. ஆனால் விவசாயிகள் இதனை எடுக்க முடியாமல் அனைத்து வங்கிகளும் முடக்கி வைத்துள்ளது.

விவசாயிகள் ஏற்கனவே பெற்றிருந்த பயிர் கடன், கல்வி கடன்களை காரணம் காட்டி நிவாரண தொகையை தர முடியாது என வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கு முரணாக வங்கிகள் செயல்படுகிறது.மன்னார்குடியை தலைமையிடமாக கொண்டு 694 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என்று 2012 ஜனவரி மாதம் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவித்திருந்தோம்.

சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் கடந்த 2016 ஏப்ரல் 6-ந் தேதி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரே‌ஷன் லிமிடெட்டுக்கு கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டு திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக பெட்ரோலிய துறை எழுத்து மூலம் தெரிவித்தது.இந்த நிலையில் மீண்டும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரே‌ஷன் நிறுவனத்தின் விண்ணப்பத்தினை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

இதனை எதிர்த்து மீண்டும் வருகிற 29-ந் தேதி சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.