அரசியல் தன்முனைப்பின்றி இலக்குகளை அடையமுடியாது

50 0

சர்வதேச பொதுக்கட்டமைப்புக்களில் நிறைவேற்றப்படும் பிரகடனங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் தன்முனைப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படுமாயின், உரிய காலத்தில் இலக்குகளை அடைந்துகொள்ளமுடியாது என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும்.

எனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட கடப்பாடுகள் உரியவாறு பூர்த்திசெய்யப்படுவதற்கு சர்வதேச மட்டத்திலான நம்பகத்தன்மையையும், ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்பவேண்டுமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறைகூவல் விடுத்துள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெற்ற 78 ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கூட்டத்தின் பக்க நிகழ்வாக நடைபெற்ற எதிர்காலத்துக்கான மாநாட்டின் அமைச்சர் மட்டக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

உலகளாவிய சமுதாயம் என்ற ரீதியில் நாமனைவரும் முகங்கொடுத்திருக்கும் பலதரப்பட்ட சவால்கள் குறித்து ஆராய்வதற்கும், அவற்றை உரியவாறு கையாள்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும், எதிர்வருங்காலத்தில் உருவாகக்கூடிய புதிய சவால்களை அடையாளங்காண்பதற்குமான சிறந்த தளமாக இந்த எதிர்காலத்துக்கான மாநாடு அமைந்துள்ளது.

காலநிலை மாற்றம், சுகாதாரத்துறைசார் அச்சுறுத்தல்கள், உணவுப்பாதுகாப்பின்மை, உலகின் பல்வேறு பாகங்களிலும் இடம்பெற்றுவரும் மோதல்கள் என்பன உலகளாவிய ரீதியில் பெருமளவான மக்கள் பாதிக்கப்படுவதற்கும், சூழலியல் பாதிப்புக்கள் ஏற்படுவதற்கும் வழிவகுத்துள்ளன. எனவே இந்த உலகளாவிய சவால்களைக் கையாள்வதற்கான எமது ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது அவசியமாகும்.

அதேபோன்று ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் கோட்பாடுகள் மற்றும் நோக்கங்கள் தொடர்பான எமது கடப்பாடுகளை மீளுறுதிப்படுத்துவதற்கும், அபிவிருத்திசார் நிதியிடல் தொடர்பான தற்போதைய கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் இது சிறந்த சந்தர்ப்பமாகும். அத்தோடு டிஜிட்டல் தொழில்நுட்ப சவால்கள், அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்கு ஏற்றவாறான டிஜிட்டல் நிலைமாற்றம், பயங்கரவாதத்தை இல்லாதொழித்தல் மற்றும் சர்வதேச நிதியியல் கட்டமைப்பை மறுசீரமைத்தல் ஆகியவற்றுக்கு இப்போது மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும்.

இருப்பினும், இப்பிரச்சினைகளை நாம் எவ்வாறு கையாளப்போகிறோம் என்ற கேள்வி தொக்குநிற்கிறது. மேலாதிக்கம், சுயநலன் மற்றும் பிறர் மீதான சந்தேகம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் மனநிலையுடன் இதனை அணுகப்போகிறோமா? அல்லது மிகுந்த தெளிவு, நேர்மை மற்றும் நல்லெண்ணத்துடன் இப்பிரச்சினைகளுக்கான தீர்வைக் கண்டடையப்போகிறோமா? மீண்டும் அடையப்படாத ஒரு தொகுதி இலக்குகளுடன் பயணிப்பதற்கும், எமது எதிர்கால சந்ததியினர் பாதிப்படைவதற்கும் நாம் இடமளிக்கக்கூடாது.

இங்கு நிறைவேற்றப்படும் பிரகடனங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் தன்முனைப்பு உலகளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படுமாயின், எமது இலக்குகளை அடைந்துகொள்ளமுடியாது என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும். எனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட கடப்பாடுகள் உரியவாறு பூர்த்திசெய்யப்படுவதற்கு சர்வதேச மட்டத்திலான நம்பகத்தன்மையையும், ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்பவேண்டியது இன்றியமையாததாகும் என்று வலியுறுத்தினார்.