சாதாரண தரப் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்படக் கூடும் ?

57 0

கல்வி அமைச்சிடம் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமைய இவ்வாண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை ஒத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 2024 பெப்ரவரியில் நடத்த திட்டமிட்டிருந்த கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகளும் ஒத்தி வைக்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை (2023 கல்வியாண்டுக்கான) எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கடந்த 4ஆம் திகதி உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பரீட்சையை ஒத்தி வைக்குமாறு பல்வேறு தரப்பினராலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவிக்கையில்,

கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானதைத் தொடர்ந்து, இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகளை குறுகிய காலம் ஒத்தி வைக்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

நகர பிரதேசங்களைப் போன்றல்லாமல், கிராமங்களிலுள்ள பாடசாலைகளில் பாத்திட்டங்கள் முழுமையாக நிறைவு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமின்றி பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக மீண்டும் பரீட்சைக்கு தோற்ற எதிர்பார்த்திருந்தவர்களுக்கு அதற்கு தயாராவதற்கு காலம் போதாது என்ற விடயமும் தெரிவிக்கப்பட்டது. பரீட்சையை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதே தவிர, திட்டமிட்ட படி பரீட்சைகளை நடத்துமாறு எவராலும் வலியுறுத்தப்படவில்லை.

பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டு சுமார் 3 மாதங்களின் பின்னரே அடுத்த பரீட்சையை நடத்த முடியும். இதனை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் பரீட்சைக்கு தோற்ற எதிர்பார்த்துள்ள 18 000க்கும் அதிகமான விண்ணப்பத்தாரர்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலம் ஒத்தி வைக்கப்படாமல், குறுகிய கால இடைவெளிக்குள் மீண்டும் பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்படும். எது எவ்வாறிருப்பினும் அடுத்த வருடம் உரிய காலத்துக்குள் சகல பாடங்களையும் நிறைவு செய்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.