நிரந்தர அரசியல் தீர்வு இல்லாமல் பொருளாதார மீட்சிக்கு வழியில்லை

207 0

நாட்டில் இனவாதமும் மதவாதமும் மேலோங்கி இனங்களிடையே விரிசலையும் சந்தேகத்தையும் உருவாக்கியுள்ளதுடன் பொருளாதார மீட்சியை மேலும் பாதித்துள்ளது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைத்தீவு பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியைக் கண்டு மீண்டெழ முடியாத நிலையில் சிக்கிய போது சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட உதவி கடன் ரணில் அரசாங்கத்திற்கு கிடைத்தது.

எனினும் பொருளாதார வீழ்ச்சிக்கு மிகப் பிரதான காரணமாக அமைந்த இனப்பிர்ச்சினைக்கு குறைந்தபட்ச தீர்வு நடவடிக்கைகளைக் கூட ரணில் அரசாங்கம் முன் நகர்த்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான சூழ்நிலையில் இரண்டாம் கட்ட கடனைப் பெற்றுக் கொள்ள இலங்கை அரசாங்கம் பல போலி நடவடிக்கைகளை மேற் கொள்ள தீவிரம் காட்டி வருகின்றது.

இனப்பிரச்சினை விவகாரம் IMF இன் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும் நாடு பொருளாதாரத்தில் மீண்டெழ வேண்டும் என்ற நோக்கத்திலேயே கடன் கொடுக்கப்படுகிறது.

ஆனால் நாட்டின் கடன் தொகை தொடர்ந்து அதிகரித்து செல்லும் நிலையில் சாதாரண வாழ்வாதாரத்தைப் பெறுகின்ற மக்கள் பாரிய வறுமைக்குள் முகம் கொடுக்கின்றனர்.இலங்கை அரசின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் உறுதியான நிலைப்பாடுகளை பெரும் கடன் வழங்குநர் ஆகிய சீனா வழங்காத நிலையிலும் உள் நாட்டு கடன் மறுசீரமைப்பு மக்களை பாதிக்காத வகையில் சீரமைக்கப்படாத நிலையிலும் பொருளாதார மீட்சிக்கான உறுதியான பொறிமுறை நகர்வுகள் மற்றும் ஏது நிலைகள் இல்லாத நிலையிலும் வழங்கப்படும் கடன் உதவிகள் நாட்டு மக்களை மேலும் வாழ்வாதார சுமைகளுக்கு உட்படுத்தும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் என்பது இலங்கை அரசாங்கத்திற்கு புதிய விடையம் இல்லை முன்னாள் ஐனாதிபதி பிறேமதாச காலத்தில் இருந்து மகிந்த வரைக்கும் பல தடவைகள் கிடைத்துள்ளன .

அவ்வாறு எனின் ஏன் இது வரை இலங்கை பொருளாதாரத்தில் வளர்ச்சியடையவில்லை என்ற கேள்வி எழுகிறது ? இதற்கு தான் விடை நிரந்தர அரசில் தீர்வு இல்லாமல் இலங்கை அரசாங்கம் கடன்களைப் பெற்று பொருளாதாரத்தில் மீட்சியடைய முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.