கோட்டாபய ராஜபக்ச, ஊடகவியலாளர்கள் மற்றும் மாற்றுக் கருத்துடையவர்களை பழிவாங்குவதற்காக உயர்மட்ட படுகொலைக் கும்பலொன்றை இயக்கி வந்துள்ளார்- குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிசார் (காணொளி)

262 0

 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, ஊடகவியலாளர்கள் மற்றும் மாற்றுக் கருத்துடையவர்களை பழிவாங்குவதற்காக உயர்மட்ட படுகொலைக் கும்பலொன்றை இயக்கி வந்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இத்தகவலை குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிசார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட சன்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான வழக்கு கல்கிசை நீதவான் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது லசந்தவின் படுகொலை தொடர்பில் விசாரணை செய்துவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் லசந்தவின் படுகொலையை, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவினால் இயக்கப்பட்ட உயர்மட்ட படுகொலை கும்பலே மேற்கொண்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.

முன்னாள் உளவுப்பிரிவின் தலைமை அதிகாரி கபில ஹெந்தவிதாரண தலைமையில் இந்த படுகொலை கும்பலை கோட்டாபய இயக்கிவந்தமை முன்னாள் இராணுவுத் தளபதியான சரத் பொன்சேகா வழங்கிய வாக்குமூலத்திலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கும்பல் இராணுவக் கட்டமைப்பிற்கு புறம்பாக இயக்கப்பட்டுள்ளதுடன் ஊடகவியலாளர்கள் மற்றும் அப்போதைய ஆட்சிக்கு எதிரானவர்கள் என்று கருதுபவர்களை பலிவாங்கவதற்கு இந்தக் கும்பலைப் பயன்படுத்தியதாகவும்  குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல படுகொலைகளுடன் கோட்டாபய ராஜபக்சவிற்க தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் முதன்முறையாகவே லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையில் கோட்டாபயவிற்க தொடர்பிருப்பதாக  குற்றப்புலனாய்வுப் பிரிவினர்  நீதிமன்றில் தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை  குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று சமர்ப்பித்த அறிக்கையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக முன்னர் கூறப்பட்டுவந்த போதிலும், லசந்த விக்கிரமதுங்க கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டே படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் புதிதாக மேற்கொள்ளப்பட்ட உடற் கூற்றியல் பரிசோதனையின் போதே இந்த உண்மை தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவினர் குறித்த படுகொலை விசாரணையை திசைத் திருப்புவதற்காகவே திட்டமிட்டு இவ்வாறான பொய்த் தகவல்கள் விசாரணை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளானர்.

இதற்கமைய தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட கல்கிசை நீதவான் தேவைப்பட்டால் சந்தேகநபர்களை கைதுசெய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

ஆயுதக் கொள்வனவின் போது, குறிப்பாக மிக் யுத்த விமானக் கொள்வனவின் போதும் மோசமான ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரமிக்க பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச மீது லசந்த விக்கிரமதுங்க நேரடியாக குற்றம்சாட்டியிருந்ததுடன், போரின் போது இடம்பெற்ற கொடூரங்களையும் பகிரங்கமாக சாடி பல்வேறு கட்டுரைகளை பிரசுரித்திருந்த நிலையிலேயே அவர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.