இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து ஈராக்கின் பழம்பெருமை வாய்ந்த மோசூல் நகரை மீட்பதற்காக நடைபெற்று வரும் உச்சகட்டப் போரால் அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர் பயத்தில் பீதி அடைந்துள்ளனர்.
ஈராக் நாட்டில் டைக்ரிஸ் நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ள முக்கிய பெருநகரமான மோசூலில் சுமார் 15 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்நகரை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள், அப்பகுதி முழுவதையும் இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ். இயக்கத்தின் ஆட்சிக்கு உட்பட்டதாக அறிவித்தனர்.
ஈராக்கில் உள்ள மோசூல் நகரை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கிருந்தபடி தங்களது ஆதிக்கத்தை உலகம் முழுவதும் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசூல் நகரை தீவிரவாதிகளின் தலைமையிடமாக மாற்றியுள்ள இவர்கள் இங்கிருந்தவாறு உலகம் முழுவதும் அப்பாவி மக்களை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இவர்களை ஒழிக்க ஈராக் ராணுவப் படைகளுடன் அமெரிக்க விமானப்படையும் துணையாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் வடமேற்கே உள்ள இந்நகரை தங்களது ஆதிக்கத்தில் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்குள்ள மக்களை மோசூல் நகரைவிட்டு வெளியேற விடாமல் மிரட்டி, தடுத்து வைத்துள்ளனர். அரசுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகித்து பலரை கொன்றும் குவித்துள்ளனர்.
மோசூலை கைப்பற்ற அமெரிக்க கூட்டுப்படையினரின் துணையுடன் ஈராக் ராணுவம் எடுத்துவந்த பல்வேறுகட்ட நடவடிக்கைகள் பெரியளவிலான பலன் தரவில்லை. மோசூல் நகருக்கு செல்லும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டதால் அங்குள்ள மக்கள் பசி, பட்டினியாலும், கடும் நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மோசூல் நகரை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது உச்சகட்ட தாக்குதல் நடத்தி, அந்நகரை உடனடியாக மீட்குமாறு ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து, கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்றுவரும் உச்சகட்ட தாக்குதலில் ஈராக் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் தரப்பில் பலர் உயிரிழந்தனர். அப்பாவி பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். உயிர் பயத்தில் சுமார் 2 லட்சம் மக்கள் மோசூலில் இருந்து வெளியேறியுள்ளனர்.சமீபத்தில் இங்குள்ள பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய அரசு கட்டிடங்களை அரசுப் படைகள் கைப்பற்றிய நிலையில், கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் உச்சகட்ட தாக்குதலின் விளைவாக அங்கு வாழும் பல்லாயிரக்கணக்கான உயிருக்கு பயந்தவாறு பீதியில் உறைந்துள்ளனர்.
உக்கிரமான போர் நடைபெற்று வரும் நிலையில் நகரின் உள்ளே வீடுகளில் மறைந்திருந்தாலும் கொல்லப்படுவோம், இருதரப்பினரும் துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளால் தாக்கிக் கொள்ளும் போர்முனையை கடந்து வெளியே செல்ல முயன்றாலும் கொல்லப்படுவோம் என்ற பீதியில் இங்குள்ள மக்கள் ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ஒரு யுகமாக கடத்தி வருவதாக ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து இன்று வெளியாகி வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

