ஆர்.கே.நகர் தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் – தீபா நாளை மனுதாக்கல்

372 0

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, பா.ஜனதா வேட்பாளர் கங்கை அமரன் ஆகியோர் நாளை மனு தாக்கல் செய்கிறார்கள்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.ஆர்.கே.நகர் தொகுதியில் 8 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. 3 பிரிவாக போட்டியிடுகிறது. தி.மு.க., பா.ஜனதா, தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் நிற்கின்றன.

நேற்று வரை 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தே.மு.தி.க. வேட்பாளர் மதிவாணன் ஆதரவாளர்களுடன் சென்று மனுதாக்கல் செய்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லோகநாதன் இன்று காலை மனுதாக்கல் செய்தார்.தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் நாளை (22-ந்தேதி) ஒருமணிக்கு மனுதாக்கல் செய்கிறார். மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்கின்றனர்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார். பா.ஜனதா வேட்பாளர் கங்கை அமரனும் நாளை மனு தாக்கல் செய்கிறார்.அ.தி.மு.க. சார்பில் நிற்கும் டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனன் ஆகியோர் 23-ந்தேதி மனுதாக்கல் செய்கிறார்கள்.

வேட்பு மனு தாக்கல் 23-ந்தேதி முடிந்ததும் 24-ந்தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்ப பெற 27-ந்தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே சின்னங்கள் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்படும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 15-ந்தேதி ராணுமேரி கல்லூரியில் நடக்கிறது.