மஞ்சள் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டம்!

85 0

பதுளை மாவட்டத்தில் இரண்டு பிரதேசங்களுக்கு மஞ்சள் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல மற்றும் ஹப்புத்தளை பகுதிகளுக்கு மஞ்சள் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு வளிமண்டலவியல் திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது.

வடமேல் மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.