போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காண நவீன தொழில்நுட்பத்தில் அனைத்து சிக்னல்களும் கண்காணிப்பு

91 0

போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் நவீன தொழில்நுட்பம் மூலம் அனைத்து சிக்னல்களையும் போக்குவரத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர். அதை அடிப்படையாக வைத்து போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

சென்னையில் நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், மழைநீர் வடிகால்வாய், மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளால் வாகனங்கள் வழக்கமான வேகத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. இச்சூழலில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காண சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் சென்னையில் உள்ள300-க்கும் மேற்பட்ட சிக்னல்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதாவது ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் சிக்னல்களைக் கடக்கின்றன? எத்தனை வாகனங்கள் சிக்னல்களில் காத்திருக்கின்றன? எவ்வளவு நேரம் காத்திருக்கின்றன? காத்திருக்கும் வாகனங்கள் எந்த வகைவாகனங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

இதற்காக ரூ.1 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அக்கருவி, கூகுள் மேப்புடன் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இதனால், தகவல்கள் விரைவாகவும் துல்லியமாகவும் சேகரிக்கப்படுகின்றன.

திரட்டப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, தேவைக்கு தகுந்தவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி, அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா சந்திப்புஉட்பட பல்வேறு முக்கிய பகுதிகளில் போக்குவரத்து போலீஸார் போக்குவரத்து மாற்றங்களை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் தெரிவித்தார்.

மேலும், கல்வி நிறுவனங்கள், வாகனங்கள் சாலை சந்திப்புகள் உள்ளிட்ட முக்கிய மற்றும் அதிமுக்கிய இடங்களில் போக்குவரத்து போலீஸார், வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சாலை சந்திப்புகளில் கூட்டமாக நின்று கொண்டு வாகனங்களை மடக்கக் கூடாது. குறிப்பிட்ட ஒருசில இடங்களில் நின்று மட்டுமே வாகனசோதனை நடத்தி, விதிமீறிய வாகன ஓட்டிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்போக்குவரத்து போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘சென்னை போக்குவரத்து போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அதேநேரம், போக்குவரத்து நெரிசல் மிகுந்தபகுதிகளைக் கண்காணித்து, அதை சீர்செய்யும்வகையில், பல மாற்றங்களுக்கான திட்டங்களை நெடுஞ்சாலைத் துறையின் நிபுணர் குழுக்களுடன் இணைந்து, வரையறுத்து செயல்படுத்தி வருகிறோம்.

அதன் ஒருபகுதியாகவே நவீன தொழில்நுட்பம் மூலம் அனைத்து சிக்னல்களும் கண்காணிக்கப்பட்டு, வாகன நகர்வுகள் தொடர்பான புள்ளிவிவரம் சேகரிக்கப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்து போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கவே போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன’’ என்றனர்.