பாரதத்தை அறம் சார்ந்து உருவாக்கியது ரிஷிகளும், முனிவர்களும்தான்: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

130 0

திருவிடைமருதூர் வட்டம் ஒழுகச்சேரியில் தமிழ் சேவா சங்கம் சார்பில், சிவ குலத்தார் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

பறையர் பேரியக்கத்தைச் சேர்ந்த சிவகுரு பறையனார் வரவேற்றார். சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தலைமை வகித்தார். சிவபுரம் ஸ்ரீ ஸ்ரீ வாயுசித்த ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: நம் நாட்டிலுள்ள கோயில்கள் நமது கலாச்சாரத்தை பறைசாற்றுவதாக உள்ளன. பாரத நாடு மன்னர்களால் உருவாக்கப்பட்டதல்ல. ரிஷிகளால், முனிவர்களால், அறம் சார்ந்து உருவாக்கப்பட்டது. உலகின் முதல் புனித நூல் ரிக் வேதமாகும்.

ஆதி பகவான் உலகத்தைப் படைத்தான். உருவாக்கப்பட்ட அனைத்தையும் ஒரே குடும்பமாக பார்க்க வேண்டும் என்ற தத்துவத்தை இந்த வேதம் கூறுகிறது. இந்தியாவின் வலிமை, பாரத இந்து தர்மத்திலிருந்து உருவானது. வேறு மதம், இனமாக இருந்தாலும், அனைவரும் ஒரே தர்மத்துக்கு கட்டுப்பட்டவர்கள். இதுவே இந்தியாவின் கட்டமைப்பாகும்.

அறிவியல், தொழில் நுட்பம், பொருளாதாரம் என அனைத்திலும் வளர்ச்சியடைந்தாலும், நம்மிடம் கலாச்சார வளர்ச்சி இல்லாவிட்டால், அது உண்மையான பாரதத்தின் வளர்ச்சியாக இருக்காது. இந்து தர்மத்தை ஒழிப்பதற்கு, அழிப்பதற்கு இங்குள்ள சிலர் பேசி வருகிறார்கள். இன்று, நேற்றல்ல, பிரிட்டிஷ்காரர்கள் காலத்திலேயே அவர்களைப் போல பலர் பேசியுள்ளனர். ஆனால் இங்கு நிலைத்து நிற்கும் தர்மத்தால், அவர்கள் வெற்றியடையப்போவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, நடைபெற்ற பரதநாட்டியம், கலாச்சார நாடகம், பறையாட்டம், சிவ வாத்திய கச்சேரி ஆகியவற்றை ஆளுநர் பார்வையிட்டார். முன்னதாக, ஆளுநரை கண்டித்து திருவாய்ப்பாடி அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியின், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் முல்லைவளவன், மண்டலச் செயலாளர் விவேகானந்தன் உள்ளிட்ட 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.