ஐ.நா. சுகாதார ஆய்வுக்குழுவின் தலைவராக இந்திய மருத்துவர் சவுமியா சுவாமிநாதன்

264 0

இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரான சவுமியா சுவாமிநாதன் ஐக்கிய நாடுகள் சபையால் அமைக்கப்படவுள்ள பன்னாட்டு மருந்து எதிர்ப்பு சக்தியைக் கொண்ட நுண்ணுயிரிகள் பற்றிய ஆய்விக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரேஸ் இந்த உயர் அமைப்பின் தலைவராக சவுமியா சுவாமிநாதனை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த மருத்துவ உயர் ஆய்வுக் குழுவில் துணைப் பொதுச்செயலர் அமீனா முகம்மதும், உலக சுகாதார நிறுவனத் தலைவர் மார்க்கரேட் சானும் இடம் பெற்றிருப்பார்கள்.

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திலுள்ள உடல் நல ஆய்வுத்துறையின் செயலராகவும் பதவி வகித்துவரும் சவுமியா சுவாமிநாதன்(57) காசநோய் தொடர்பான ஆய்வில் தன்னை நீண்ட காலனாக ஈடுபடுத்திகொண்டு சேவையாற்றி வருகிறார்.

1992 ஆம் ஆண்டு முதல் சென்னையில் பணிபுரியத் துவங்கிய சவுமியா சுவாமிநாதன்(57) சுமார் 23 ஆண்டுகளக உடல்நலம் சார்ந்த ஆய்வில் ஈடுபட்டவராவார்.

சவுமியா தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஐ.நா. ஆய்வுக் குழுவின் முதல் கூட்டம் இன்னும் சில வாரங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 73-வது ஐ.நா. பொதுச்சபையின் கூட்டத்தின்போது இக்குழு தனது அறிக்கையை பொதுச் செயலரிடம் வழங்கும்.

நோய் எதிர்ப்புச் சக்தியை முறியடிக்கும் ஆற்றலை நுண்ணுயிரிகள் வளர்த்துக் கொள்வது குறித்த இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு தேவையான பரிந்துரைகளை ஐக்கிய நாடுகள் சபை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.