பட்ஜெட் தாக்கலின்போது ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா, சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலா பெயர்களை நிதி அமைச்சர் குறிப்பிட்டதும் கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் ‘பட்ஜெட்’ மிகவும் புனிதமான ஆவணமாகும். சட்டசபையில் ‘பட்ஜெட்’ தாக்கல் செய்யப்படும் முன்பாக, அந்த ஆவணத்தை சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் பார்க்கக்கூடாது என்பது விதியாகும். அவ்வாறு வேறு எவரேனும் அந்த ஆவணத்தை படித்தாலோ அல்லது பார்த்தாலோ அதற்கு பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட அரசு பதவி விலக வேண்டும் என்பது மரபு.
ஆனால் நிதி அமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் ‘பட்ஜெட்’டை தாக்கல் செய்வதற்கு முன்பாக அதை ஜெயலலிதா சமாதியில் வைத்து வணங்கியிருக்கிறார். மேலும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா, சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, ஹவாலா மோசடி வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள தினகரன் ஆகியோரின் பெயர்களை நிதி அமைச்சர் குறிப்பிட்டதும் கண்டிக்கத்தக்கது.சட்டசபையின் புனிதத்தையும், ‘பட்ஜெட்’ தாக்கல் செய்யப்படும் நிகழ்வின் புனிதத்தையும் இதைவிட எவரும் கெடுக்க முடியாது. பேரவை மாண்புக்கு எதிரான இந்த செயலை சபாநாயகர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது மன்னிக்க முடியாத செயலாகும்.
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர், அண்ணா போன்ற தலைசிறந்த முதல்-அமைச்சர்களையும், நிதி அமைச்சர்களையும் சட்டசபை பார்த்திருக்கிறது. அவர்களின் செயல்களால் புனிதமடைந்த தமிழக சட்டசபை, நிதி அமைச்சரின் இன்றைய செயல்களால் தலைகுனிந்திருக்கிறது. அவையின் மாண்பையும், புனிதத்தையும் காப்பதற்காக நிதி அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

