பாரீஸ் சர்வதேச நிதி அலுவலகத்துக்கு நேற்று வந்த ஒரு கடிதத்தை பெண் ஊழியர் ஒருவர் திறந்தபோது அது வெடித்தது. இதனால் அவரது கைகளிலும், முகத்திலும் படுகாயம் ஏற்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் ஐ.எம்.எப். என்னும் சர்வதேச நிதி அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்துக்கு நேற்று வந்த ஒரு கடிதத்தை பெண் ஊழியர் ஒருவர் திறந்தபோது அது வெடித்தது. இதனால் அவரது கைகளிலும், முகத்திலும் படுகாயம் ஏற்பட்டது. வெடித்தது, கடித வெடிகுண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது.இந்த சம்பவத்தையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
படுகாயம் அடைந்த பெண் ஊழியர், உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை தரப்படுகிறது.இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.இதற்கிடையே அங்கு கிராஸே நகரில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் ஒருவர் திடீரென நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் பலர் காயம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து கூடுதல் தகவல் இல்லை.

