யாழில் ஆலயங்களில் வேள்வி நடாத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

248 0
யாழ். குடாநாட்டு ஆலயங்களில் விலங்குகள் வெட்டி வேள்வி நடத்துவதற்கு எதிராக  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு நேற்றைய தினம் நீடிக்கப்பட்டுள்ளது.
ஆலயங்களில் விலங்குகளைப் பலிகொடுத்து நடத்தப்படும் வேள்விகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அகில இலங்கை சைவ மகாசபை தாக்கல் செய்திருந்த மனு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி மா.இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
 யாழ் குடாநாட்டின் ஆலயங்கள் சிலவற்றில் மிருகபலி கொடுத்து நடத்தப்படும் வேள்வியை உடனடியாகத் தடுத்து நிறுத்தும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அகில இலங்கை சைவமகா சபையினால் சட்டத்தரணி மணிவண்ணன் ஊடாக யாழ் மேல் நீதிமன்றத்தில் தடையீட்டு எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் தரப்பிலான சட்டத்தரணியின் கோரிக்கையைப் பரிசீலனை செய்த நீதிபதி இளஞ்செழியன் அதற்கான இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துகடந்த வருடம்  தீர்ப்பளித்திருந்தார்.
குறித்த வழக்கு நேற்றைய தினம் மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மீண்டும் இடைக்கால தடை உத்தரவை நீடித்ததுடன் கோவில்கள் இறைச்சிக் கடைச்சட்டத்தின் கீழ் இயங்குகின்றனவா? இறைச்சிக்கடைச் சட்டத்தின் கீழேயே இந்த வேள்விகளுக்கான ஆடு கோழி என்பவற்றை வெட்டுவதற்கான அனுமதி வழங்கப்படுவதனால் ஆலயங்களுக்கு அத்தகைய அனுமதி வழங்க முடியாது. இறைச்சிக்கடை நடத்துவதற்கான அனுமதியை தான் கோருகிறீர்கள்.
கோவில்களில் விலங்குகளை வைத்து பூஜைகள் மேற்கொள்ள முடியும் ஆனால் வேள்வி நடத்த முடியாது. நீதி மன்ற உத்தரவை மீறி இக்குற்றத்தைப் புரியும் கோவில் தர்மகர்த்தாக்கள் மற்றும் பூசகர்கள் இறைச்சிக்கடைச் சட்டத்தின் கீழ் மற்றும் விலங்குகளைக் கொடுமைப்படுத்தும் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அத்துடன் ஆலயங்கள் சீல் வைக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.