மலேசியாவில் கொலை செய்யப்பட்ட கிம் ஜாங் நாம் உடல் பதப்படுத்தப்பட்டது

262 0

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட கிம் ஜாங் நாம் உடல் கெட்டு விடக்கூடாது என்பதற்காக முறைப்படி பதப்படுத்தப்பட்டுள்ளது என்று மலேசிய துணை பிரதமர் அகமது ஜாகித் ஹமிதி அறிவித்துள்ளார்.

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் அண்ணன் கிம் ஜாங் நாம் (வயது 46), கோலாலம்பூர் விமான நிலையத்தில், ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்ட ‘விஎக்ஸ்’ என்னும் ரசாயனத்தை பயன்படுத்தி கடந்த மாதம் 13-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில், இந்தோனேசிய பெண் சிட்டி ஆயிஷா (25), வியட்நாம் பெண் டொன் தி ஹூவாங் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது முறைப்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிம் ஜாங் நாம் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகியும், இன்னும் அவரது குடும்பத்தினர் யாரும் அவரது உடலை உரிமை கோரவில்லை. அதே நேரத்தில் மலேசிய அரசு, அவரது உடலை உரிமை கோரி வருவார்கள் என காத்திருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் அவரது உடல் கெட்டு விடக்கூடாது என்பதற்காக முறைப்படி பதப்படுத்தப்பட்டுள்ளது என்று மலேசிய துணை பிரதமர் அகமது ஜாகித் ஹமிதி அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “உடல், பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதால் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் அதை பதப்படுத்தி வைத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டார். கிம் ஜாங் நாம் உடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரகசியமாக பிணவறையில் இருந்து வெளியே எடுத்துச்செல்லப்பட்டு, பதப்படுத்தப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மலேசியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே ராஜ்யரீதியில் ஏற்பட்டுள்ள பனிப்போருக்கு தீர்வு பிறக்கவில்லை. இரு தரப்பும் பேசி வருவதாக மலேசிய துணை பிரதமர் அகமது ஜாகித் ஹமிதி தெரிவித்தார்.