சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. பல முனைப்போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகியிருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. பல முனைப்போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகியிருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்த நிலையில், அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி, காலியானதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அடுத்த 6 மாதத்துக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும்.
அந்த வகையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் மாதம் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
பொதுவாக, தமிழகத்தில் இதுவரை நடந்த இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெற்று வந்திருக்கிறது. ஆனால், ஆர்.கே.நகர் தொகுதியில் அதேபோன்று முடிவு வருமா? என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்து சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் உருவாகியுள்ளது. மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் புதிதாக அரசியல் பிரவேசம் தொடங்கியிருப்பதுடன், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறியிருக்கிறார்.
எனவே, அ.தி.மு.க. தரப்பில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 3 அணி களம் இறங்குவது உறுதியாகியிருக்கிறது.இதுபோக, தி.மு.க., பா.ஜ.க., மக்கள் நலக்கூட்டணி, என் தேசம் என் உரிமை உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட இருப்பதால், பல முனைப்போட்டி அங்கு உருவாகியுள்ளது.
இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் இணை இயக்குனர் தி.நா.பத்மஜாதேவி நியமிக்கப்பட்டுள்ளார். அவரது அலுவலகம் தண்டையார்பேட்டையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகம் 4-ல் செயல்பட இருக்கிறது.
எனவே, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் அங்கேயே சென்று வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ளலாம். பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பங்களையும் அங்கேயே அளிக்கலாம். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் இம்மாதம் 23-ந்தேதி ஆகும். தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 24-ந்தேதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 27-ந்தேதி ஆகும்.
எனவே, 27-ந்தேதி மாலையே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 15-ந்தேதி நடத்தப்பட்டு, அன்று மதியத்திற்குள் முடிவு அறிவிக்கப்பட இருக்கிறது.

