சசிகலாவுக்கு என் ஆதரவு இல்லை: திருநாவுக்கரசர் பேட்டி

213 0

உச்சநீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலாவுக்கு என் ஆதரவு இல்லை என ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு திருநாவுக்கரசர் பேட்டியளித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி விவரம்:-

கேள்வி: ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் சசிகலாவுக்கு ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரசில் ஒரு பிரிவினரே இதே கருத்தை கூறுகிறார்கள். இதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்: தனிப்பட்ட எந்த நபருக்கும் நான் ஆதரவாக இருக்கவில்லை. அரசியல் சித்தாந்தத்தின்படி ஒரு கட்சி தனது சட்டசபை தலைவரை தேர்வு செய்தால் அவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். அ.தி.மு.க.வில் சசிகலா சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையிலேயே இந்த தேர்வு நடைபெற்றது. எனவே அப்போது அது சம்மந்தமாக எனது கருத்தை கூறினேன்.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்க இருந்த நிலையில் நான் அதை வற்புறுத்தவில்லை. சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு 4 ஆண்டு தண்டனை வழங்கியது. 10 ஆண்டு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. இப்படி இருக்கும் நிலையில் கோர்ட்டால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவருக்கு நான் ஏன் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் கூட இதே சூழ்நிலையைத்தான் அவரும் சந்தித்து இருப்பார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற தலைவராக தேர்வு செய்த போது அவருக்கும் நான் ஆதரவு தெரிவித்தேன். குதிரை பேரம் நடக்கக் கூடாது என்பதற்காக அப்படி செய்தேன்.

அதுமட்டுமல்ல பாரதிய ஜனதா அரசியல் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் சிலரின் உதவியுடன் மாநில ஆட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்தது.

கே: சிலர் என்று யாரை குறிப்பிட்டு சொல்கிறீர்கள்?

ப: ஜெயலலிதா மரணத்திற்கு பாரதிய ஜனதா தமிழக ஆட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தது. அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். ஆரம்பத்தில் பன்னீர்செல்வத் துக்கு ஆதரவாக செயல்பட்டார்கள். அது தோல்வியில் முடிந்தது.

எடப்பாடி பழனிச்சாமியிடமும் அதேபோல நடந்து கொண்டார்கள். தமிழக அரசு தங்களுக்கு நட்பாக இருக்க வேண்டும். அல்லது அடிபணிந்து செல்ல வேண்டும் என்று பாரதிய ஜனதா விரும்புகிறது.

கே: ஜெயலலிதா மரணத்தால் தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதா?

ப: நான் தனிப்பட்ட முறையில் சொல்வதென்றால் ஜெயலலிதா மரணத்தால் தலைமை பதவியில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பது உண்மை தான். அதுமட்டுமல்ல தி.மு.க.விலும் தலைவர் கருணாநிதி நீண்டகாலமாக தீவிர அரசியலில் இல்லை. அ.தி.மு.க.- தி.மு.க. இவற்றை அமைப்பு ரீதியாக பார்த்தால் சில பாதிப்புகள் உள்ளன.

தி.மு.க.வை பொறுத்த வரை மு.க. ஸ்டாலின் தலைமை பதவியை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு விட்டார். அவர் தலைமை பதவியில் சிறப்பாக செயல்படலாம். பழனிச்சாமியும் அதேபோல செயல்பட வாய்ப்பு உள்ளது. ஆனாலும் அவர்கள் எப்படி செயல்படப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கே: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தலைவர்கள் வெற்றிடத்தை காங்கிரஸ் கட்சி சரியாக பயன்படுத்தி கொள்ளுமா?

ப: நாங்கள் தமிழ்நாட்டின் 3-வது பெரிய கட்சி. பலதரப்பட்ட மக்களும் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நாங்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டால் காங்கிரஸ் மிகப்பெரிய எழுச்சியை பெறும் நிலை ஏற்படும். எங்களுக்கும் தனியாக ஓட்டு வங்கி உள்ளது.

அதே நேரத்தில் எல்லா மட்டத்திலும் அமைப்பு ரீதியாக நாங்கள் வலுவடைய வேண்டியது உள்ளது. நாங்கள் காமராஜர் ஆட்சி பற்றி கூறும்அதே நேரத்தில் இது மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மக்களை எங்கள் பக்கம் இழுக்க வேண்டும்.

கே: தி.மு.க., அ.தி.மு.க.வை சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

ப: தி.மு.க. எங்களுடைய கூட்டணி கட்சி. இதற்காக எல்லாவற்றிலும் அவர்களை பின்தொடர்ந்து செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. தி.மு.க.வினரும் இதை எங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. பொறுத்தமானவற்றில் நாங்கள் அவர்களுடன் இருப்போம். கூட்டணி கட்சியை எல்லா வி‌ஷயத்திலும் பின் தொடர்ந்து சென்றால் நாம் நமது கட்சியை வளர்க்க முடியாது. நாங்கள் தேசிய கட்சி என்ற முறையில் எங்களுடைய மேலிடம் எடுக்கும் முடிவிற்கு தகுந்த மாதிரியும் அவர்களுடன் ஆலோசனைப்படியும் செயல்படுவோம்.

கே: கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ப. சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் நீங்கள் கலந்து கொள்ளவில்லை. உங்களை அழைக்கவில்லையா?

ப: எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்று நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநாடு நடந்தது. நான் அதில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்தேன். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்கள் நடக்கலாம். அதில் எல்லாவற்றிலும் நான் கலந்து கொள்ள முடியாது.

காங்கிரசை பொறுத்தவரை இங்கு உள்கட்சி ஜனநாயகம் பரந்து விரிந்து உள்ளது. அதில் தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை நீண்ட காலமாக தராளமாக கூறி வருகிறார்கள். இதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.