தெற்கு சூடானில் 2 இந்திய பொறியாளர்கள் கடத்தல்: கிளர்ச்சிக்குழு கைவரிசை

224 0

உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் தெற்கு சூடானில், 2 இந்திய பொறியாளர்களை கிளர்ச்சிக்குழு கடத்தி வைத்துள்ளது.

தெற்கு சூடானில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெறு வருகிறது. இதன் காரணமாக அந்த நாடு பேரழிவை சந்தித்து வருகிறது. ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக் குழுவினர், அரசுப் படைக்கு எதிராக சண்டையிட்டு வருவதால், பாதுகாப்பு கருதி கடந்த ஆண்டு இந்தியர்கள் பலர் விமானம் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். கடந்த பிப்ரவரி மாதம் ஒரு இந்தியர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றியதாக குற்றம் சாட்டி, அப்பர் நைல் மாநிலத்தில் உள்ள இரண்டு இந்திய பொறியாளர்களை கடத்தி வைத்திருப்பதாக கிளர்ச்சிக் குழு கூறியுள்ளது. எப்போது கடத்தப்பட்டனர் என்ற விவரம் வெளியாகவில்லை.

ஆனால், நாடு கடந்து தென் ஆப்பிரிக்காவில் வாழும் தங்கள் தலைவர் ரீக் மச்சார் முடிவு எடுக்கும் வரையில் இரண்டு இந்தியர்களும் தங்கள் பிடியில் இருப்பார்கள் என கிளர்ச்சிக்குழுவின் செய்தித் தொடர்பாளர் இன்று கூறியுள்ளார். இந்தியர்கள் கடத்தப்பட்டது குறித்து தெற்கு சூடான் ராணுவம் தரப்பிலோ இந்திய தூதரகம் தரப்பில் இருந்தோ எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.