தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்து விட்ட தென்றல். லெப். கேணல் டேவிட்

424 0

தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்து விட்ட தென்றல்.

விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன் காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில் ஒருவன்.

தமிழீழத்தின் விடுதலைப் போராட்டம், எல்லாக் காலங்களிலும், கடல் பிரயாணங்களை முதன்மைப்படுத்துவதாகவே அமைந்தது. எத்திசையும் கடலால் சூழப்பட்ட எம் தாயகத்தின், தாக்கமுள்ள நகர்வுகள் கடல் மூலமே மேற்கொள்ளப்பட்டன. எமது விடுதலைப் போராட்டத்தில், கடல் பயணங்கள் பிடித்திருந்த இடத்தின், அதே அளவு இடத்தை, எமது கடல் சரித்திரத்தில் டேவிட் பிடித்திருந்தான்.

அவனது இளமையிலேயே கடல் அவனை அழைத்தது. அவனது குடும்ப நிலை அவனை கடலுக்கு அனுப்பியது.

“இயக்கம் கடலில் பிரயாணம் செய்ய வேண்டி வரும்” என்ற காலம் போய், “இயக்கத்தின் பிரயாணம் கடலில் தான்” என்று வந்துவிட்ட 1983-ல் இயக்கத்திற்காய் கடலில் இறங்கினான்.

தமிழீழத்தின் ஒவ்வொரு கரையிலும் கால் பதித்தான். நீண்ட பெரும் கடற்பரப்பு, கடற்பரப்பில் புள்ளியாய் நகரும் படகு, படகினைப் போல் பல்மடங்கு விரிந்து, எழுந்து, விழுங்க வரும் அலைகள், சமுத்திர ராட்சதனின் அலைவாய் மூடமுதல், விரைந்து, தத்திப் பாய்ந்து, வெளியேறி, திரும்பிப்பார்க்கும் லாவசம். திரும்பிய பார்வை நேரே நோக்க அடுத்த பெரும் அலை.

படகினை பல்மடங்கு வேகத்துடன் துரத்தி, தீ உமிழும் பீரங்கி வாய்கள், அவற்றின் பல்முக நகர்வுகளிலும் தப்பி, தத்திச் செல்லும் வேகம், பின்னால் வரும் எதிரியின் கை அதிகமாய் நெருங்கின், நின்று – நிதானித்து இயந்திரத் துப்பாக்கியை இயக்க ஆணையிடும் உறுதி, அந்தக் கணத்தில் எதிரி அடையும் அதிர்ச்சி டேவிட்டை பல தடவைகள் கரை சேர்த்துள்ளது.

அவனது கடற்பயணங்கள் மெய்சிலிர்க்கும் பல அனுபவங்களைக் கொண்டது. அவனது ஆசான்களும், நல்ல நண்பர்களும் கடலிலேயே கலந்து விட்டனர். அப்போதெல்லாம் கூட, அவன் கடலில் நிலைத்து நின்றான். அவனது தப்பியோடும் வாலகமும், தேவையின் போது எதிர்த்து நின்று எதிர்கொள்ளும் நெஞ்சுறுதியுமே அவனை நிற்க வைத்தது.

இன்று இயக்கத்தின் வசமுள்ள பெருமளவு ஆயுதங்களுக்கு டேவிட்டை தெரியும்.

ஆம்! ஆவை எமது கைகளுக்க கிடைப்பதற்கிடையில் டேவிட் இருந்திருப்பான்.

அநேகமாக எப்போதுமே நாம் கரையில் காணும் டேவிட்டைக் கடலில் சந்திக்க முடியாது. ஒருங்கிணைந்த சிந்தனையுடன், தன்னை நம்பி படகில் ஏறிய “நீந்தத் தெரியாத சுமைகளுக்கு” உத்தரவிடும் டேவிட், கடுமையான வசைகளால் ஓட்டிமாரை கட்டுப்படுத்தும் மாலுமி. கடலில் டேவிட்டை, டேவிட்டாக பார்ப்பது கடினம்.

எப்போதாவது மிக அபூர்வமாக, சீரான, நேவியில்லாத ஒதுக்குப்புறபடகில், நல்ல நிலவும் சேர்ந்தால் அவனது படகு நிற்கும். இயந்திரச் சத்தத்தை மேவி அவன் குரல் ஒலிக்கும். “கடல் மேல் பிறக்க வைத்தான்…” அவனது குரல் இனிய சங்கீதம் இல்லைதான். ஆனாலும் அவன் பாடினால் நின்று, நிதானித்துக் கேட்கவைக்கும் வசீகரம். அந்த வசீகரம் அவனது குரலுக்கா? அல்லது அவன் பாடும் பாடல்களுக்கா?

அவனது குரலில்; பாடல் கம்பீரம் பெறுவது தெரியும். அந்தக் குரலுக்கு, அவன் தெரிவு செய்யும் பாடல்களை விட, வேறுபாடல் எடுபடாதென்பதும் புரியும்.

அவனைத் தெரிந்த, அவனுடன் பழகாத எல்லோராலும் கூறப்படும், எண்ணப்படும், எண்ண வடிவங்களுக்கு அப்பாற்பட்ட போராளி. அநேக போராளிகளைப் போல் அவனுக்கும் “பழஞ்சோறு குழைத்துக் கையில் கொடுக்கும் அம்மா” “ஆமியின் வெடி கேட்டும் சிறுபற்றை சரசரக்காமல் தேத்தண்ணிச் செம்புடன் அண்ணனை, அண்ணனின் தோழர்களை தேடும் தங்கைகள்”. வீட்டின் நிலையை எண்ணுவதா? நாடா? என்ற கேள்விக்கு எப்போதுமே குழப்பமில்லாத பதிலைத் தன் வசம் வைத்திருந்த போராளி. மிக நெருக்கமான நண்பர்களிடம் மட்டும் “தங்கச்சியவை” என்று கூறிக் கண்கலங்கும் அண்ணன்.

எப்பேற்பட்ட வேலையாக இருந்தாலும் அவ் வேலையின் முக்கியத்துவம் விளங்கவைக்கப்பட்டால், அந்த வேலையை செய்து முடிக்கும் வரை அவன் ஓய்வது அபூர்வம். அவனது நினைவுகள் மீட்டப்படும் போது திரும்ப திரும்ப அவனது அக்குணநலனே எவருக்கும் முன்நிற்கும்.

தமிழீழத்தின் கடற்பரப்பில் மட்டுமல்ல, தமிழீழத்தின் தரைப் போர் வாழ்க்கையிலும் அவன் சாதித்தவை அதிகம். அதிலும் வடமராட்சியில் நடைபெற்ற அநேகமான சண்டைகளில் அவனது சுவடுகள் பதிந்திருந்தன.

இந்திய இராணுவத்திற்கு முந்திய போர் வாழ்வில், ஒப்பிரேசன் லிபரேசனுக்கு முன்பும் பின்பும் வடமராட்சியில் அவன் பங்கு அதிகம். ஒப்பிரேசன் லிபரேசனுக்கென ஆமி புறப்பட்டதிலிருந்து, நெல்லியடி முகாமிற்குள் மில்லர் புகுந்தது வரை அவன் ஓயவில்லை.

இந்திய இராணுவ யுத்தம் ஆரம்பித்த காலத்தில் தமிழ் நாட்டில் தங்கியிருந்தவன். யுத்தம் ஆரம்பித்து, கொழுந்துவிட்ட நேரத்தில் தள்ளியிருக்க முடியாமல், ஒரு கட்டுமரத்தில் வந்து சேர்ந்தான். இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் வடமராட்சியில் இயக்கத்தை உயிர்த்துடிப்புடன் வைத்திருந்ததில், அவன் பங்கு மிகப் பெரியது.

அனேகமாக இயக்கத்தை எல்லாத் துறைகளிலும் தனது முத்திரை பதித்தவன். அரசியல்? அவன் அரசியல் வித்தகன் இல்லைதான் எனினும், தான் ஏந்திய துப்பாக்கி எதற்காக என்பதில் குழப்பமில்லாதவன். மக்களுடன் பழகும் போதினில் அந்த மக்களில் ஒருவனாக நின்று சிந்திக்கத் தெரிந்தவன்.

எல்லாத் தலைமறைவுக்கால வாழ்க்கையிலும், மக்களால் பாதுகாக்கப்பட்டவன். டேவிட் நின்றால் ஆமி பார்த்துச் சொல்லவதற்கென ஒரு முதியோர் படையே திரளும்.

அவன் உலவும் ஊர்களில் சிறுகுழந்தைக்கும் அறிமுகமாகிவிடும் முகராசி. சிறுவர்களை ஒருதடவை சந்தித்தால், மறுதடவை சந்திக்கும் போது அவர்களை பெயர் சொல்லி அழைக்கும் நட்புணர்வு அல்லது அவர்கள் வெட்கத்தில் முகம் சிவக்க இவன் ஒரு பெயர் வைத்திருப்பான். சிறுவர்கள் என்றல்ல எவருடனுமே நட்பைப் பேணுவதில் தனித்துவமானவன், பழைய நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் தனியான ஆர்வமுள்ளவன். எப்போதோ ஒருமுறை “வண்டி விட்ட கரையில்” லாம்பு வெளிச்சத்தில் சாப்பாடு கொடுத்தவரை யாழ்ப்பாணத்தில் கண்டு “என்னைத் தெரியேல்லையே, களுவன்கேணியில் றால் கறியோடை புட்டுச் சாப்பிட்ட நாங்கள் எல்லே” என்று கேட்டு அசத்துவான்.

பழைய நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்தால், மறந்துவிட்ட, திருப்பக் கிடைக்காத, நினைவுகளை மீட்டுவது டேவிட் தான். இவனது நட்பைப் பேணும் பண்பால் பலராலும் விரும்பப்பட்டவன். சில வேளைகளில் வேலை நேரங்களிலும் “நட்பைப் பேணப் போய்” வாங்கிக்கட்டிக் கொண்டு தலையைச் சொறிவான்.

இயக்கம் மிக அரிதாகச் சந்தித்த “எல்லா வேலைகளிலும் வல்லுனர்களாக விளங்கக்கூடிய” சிலரில் டேவிட் ஒருவன். ஆனால் கடல் என்பது ‘பெரிய கடலாக’ இருந்தது. அதில் இயக்கத்தின் கடற்பிரிவு மிகச் சிறியதாக இருந்ததால் அவனால் கடலை விட்டுவிட்டு வர முடியவில்லை. அவனது குறைந்த பாடசாலைக் கல்வியின் போதும் கூட பெரிய திட்டமிடல் திறன் இருந்தது. அது புரிந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

அவனது எதிர்பார்ப்புக்களுக்கெல்லாம் அவனுக்கு களம் கிடைக்கவில்லை. கடல் அவனை மறித்து வைத்திருந்தது.

அது ஒரு முக்கிய கடற்பயணம், தேவை பெரியது, டேவிட் தேவையான ஒழுங்குகளை வழமைபோல் சரிபார்க்கிறான். கடல் தெரிந்தவர்கள் கடலில் ஓடத்தயங்கும் காலநிலை. ஆனாலும் பிரயாணம் அவசியமானதானவும், ஒத்திவைக்க முடியாததாகவும் இருந்தது.

கடலைத் தவிர எல்லாமே வழமைபோலத்தான். வழமையான தடபுடல்இ வேகமான பிக்கப்……, பெரிய நம்பிக்கை விதையை டேவிட் நெஞ்சில் விதைத்து விட்டு ஆயத்தமாகிறான். வழமையாக ஓடித்திரியும் நேவியையும் காணவில்லை. எல்லாமே நம்பிக்கையடன் இருக்கிறது. வண்டி புறப்படும், அதுவும் டேவிட் நேரில் புறப்படும் காரணம் சொல்லப்படாவிட்டாலும், வழமை போலவே ஊகித்துக் கொண்டு வழியனுப்புகிறார்கள். டேவிட்டை அன்புடன் வளர்த்துப் பாதுகாத்த மக்கள் – அவனுடன் மிக அன்பாகப் பழகியவர்களில் நல்லாய்க் கடல் தெரிந்தவர்கள் அன்று கரைக்கு வரவில்லை.

படகு நீரில் இறங்குகிறது. “குழந்தைப் பிள்ளையை கையிலே பிடித்துக் கூட்டிச்செல்லும் வாஞ்சையுடன்” இரு கரையிலும் ஆட்கள் வரிசையாய் நின்று, படகினை கடலினுள் இழுத்துச் செல்கிறார்கள். இடுப்பளவு தண்ணீரில் இறங்கிய பின்னர், அணியத்தில் நின்ற அரி தடியால் ஊன்ற படகு தள்ளாடி, நகர, அண்ணாந்து நின்ற இஞ்சின் வால்கள் தண்ணீரில் குளிக்க, எல்லாம் வழமைபோலவே.

“நல்லாய் சேவிஸ் போட்ட இஞ்சின் ஒரு இழுவையில் ஸ்ராட்வர”இ இருட்டில் நின்ற தோழர்களும் மக்களும் வண்டியில் நிற்பவர்களுக்கு “தெரியாது என்று தெரிந்தும்”இ கையை உயர்த்தி மெல்ல அசைக்கிறார்கள். வண்டியில் நின்றவர்களும் கையசைத்திருப்பார்கள்…….?

ஒரு இஞ்சினில் கொஞ்சத்தூரம் ஓடிப்போய் நின்று தயாராகையில்இ “துணியில் பொத்தி ரோச்லைட் அடிப்பது” தெரிகிறது.

அல்பா, அல்பா……

என்னமாதிரி?

பிரச்சினையில்லை, குதிரைக்கு சாப்பாடு கொடுக்கினம்……

கரிகாலனின் பதில் வோக்கியில் கேட்கிறது.

பின் ஒவ்வொரு இஞ்சினாக சத்தமிட படகு நகராமலே இஞ்சின் சத்தம் அதிகரித்து, குறைந்து, மிக அதிகரித்து, தணிவது கேட்கிறது.

படகு வழமைபோல வலப்புறமாய் வட்டமிட்டு நிழலாய் நகர்கிறது. “எப்போதும் போல், ‘தேவையும் கடலும் தவிர’ மற்ற எல்லாம் வழமை போல்”

 

நீரைக்கிழித்து, வெண்நுரை கிளம்ப, அலையில் எழும்பிப் பாய்ந்து…… படகு புறப்பட்டுவிட்டது. அதிகரித்த சத்தமும், கரையில் கூடிய கூட்டமும் சிறிது சிறிதாய் மறைய கடல் தெரியாதவர்களின் திருப்தி பெரு மூச்சுடன், கடலைத் தெரிந்தவர்களின் கனத்த பெருமூச்சு கலந்தபோது, “வண்டி வெளிக்கிட்டு விட்டது” இஞ்சின் சத்தம் கரைவதற்கு முன்னரே, கரையிலுள்ள வோக்கி…,

அல்பா……… அல்பா என அழைத்தது.

“தண்ணியடிக்குது தானே வோக்கியை அதுதான் லொக் ரியூப்பிலை வைத்திட்டினம் போல” எனக் கூறிவிட்டு, முயற்சியை கைவிடும் போதும் கூட, இஞ்சின் சத்தம் கேட்டுக் கொண்டுதானிருக்கிறது.

நேரம் கரைய, முகாமுக்கு திரும்ப நினைக்கும் வேளையில், தூரத்து முகாம் வோக்கியில் ஒரு அவசர அழைப்பு. “வோக்கியில் அல்பா தொடர்பெடுத்தது…….”

“என்னவாம்”……

“கிளியரில்லை, சரியாக விளங்கேல்லை பிறவோ…… பிறவோ…… என்று அவையள் கூப்பிட்டமாதிரியிருந்தது……

“சொல்லு”……

“போட்வெடிச்சிட்டுது, வண்டி அனுப்புங்கோ, எண்ட மாதிரிக் கிடந்தது. அவையளின்ரை கிளியரில்லை, ஒண்டும் விளங்கவில்லை”……
“ஆர் கதைச்சது……”

“டேவிட் அண்ணை மாதிரித்தான் கிடந்தது, ஒண்டும் விளங்கேல்லை……

அடுத்த படகினை ஆயத்தம் செய்த வேளை, இஞ்சின் எடுக்கப் பிக்கப் விரைந்த வேளை, உறுதியற்ற வோக்கிச் செய்தியை நம்புவதா, இல்லையா என்று யோசித்த வேளை, நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. அலை விரித்துக் கொண்டிருந்தது.

“சன்னதம் கொண்டு நின்றது கடல். தேடப்போகும் படகினை, தேடப்போகவென மற்றப்படகை, தயாராக வைக்க, வைக்கும் கடல்!”

நேரம் செல்லச் செல்ல “வோக்கிச் செய்தி பிரமையோ?” என நினைக்க வைக்கும், வெறுமையுடன் காத்திருக்கும் வேளையில், தேடப்போன படகின் வோக்கி அழைக்கிறது.

அரியைக் கண்டிட்டம், தூரத்தில் இன்னுமொரு ஆள் தெரியுது……

என்னமாதிரி…… என்னமாதிரி…… என்ற வோக்கிக்கு பதில் சொல்லாமல் தேடும் படகு கரைநோக்கி வர, “படகில் அரியுடன் ரட்ணா.”

“என்ன நடந்தது?”

“வோட் பிரிஞ்சிட்டுது, நடுவாலை முறிஞ்சு அணியம் தனிய, கடயார் தனிய ரெண்டாப் போச்சுது”

“மற்றாக்கள் என்ன மாதிரி? டேவிட் அண்ணை என்ன மாதிரி?” “இருட்டுக்கை எல்லாரையும் கூப்பிட்டு ஒண்டாக்கினவர். எல்லாரையும் நீந்தச் சொல்லிப்போட்டு, அவர் கரிகாலனைக் கூப்பிட்டு தன்னட்டை எடுத்தவர்.

முழுவிடயங்களையும் சொல்லமுடியாது அரியும், ரட்ணாவும் மயங்கி விட்டார்கள்.

மீட்கப்பட்ட இருவரும் உப்பு நீரால் உதடுகள் வெடித்து, முகம் புண்ணாகி “கோலம் கெட்டுப்போய்”; இருந்தார்கள்.

படகுகள் போயின வந்தன. செய்தி கேள்விப்பட்ட சனமெல்லாம் கரைமுழுக்க கூடி நின்று தேடினர். படகுகளின் தேடுதலுக்கு மேலாக, டேவிட்டின் திறமையில் எவ்லோரும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

“முதலும் இரண்டு நாள் கடலுக்கை கிடந்து, வந்து சேர்ந்தவன் தானே”

“மன்னாரிலை ஒருக்கா இரண்டு பொம்பிளைப்பிள்ளையளைத், தனியக் கொண்டு வந்து சேர்த்தவனெல்லே”

டேவிட்டின் நீச்சல் திறமையில் எல்லோருக்கும் நம்பிக்கை இருந்தது.

“உந்த மட்டு மட்டு நீச்சல் பெடியள் வந்து சேந்திட்டாங்களாம் டேவிட் ஏன் வரமாட்டான்?”

எல்லோரும் நம்பிக்கையுடன் காத்திருந்த போதும், அரி வைத்தியசாலையில் கூறிக் கொண்டிருந்தான் “எங்களை நீந்தச் சொல்லிப் போட்டு கரிகாலனைத்தான், இழுத்துக் கொண்டு நிண்டவர்”

படகில் சென்றவர்களில் “கடலுடன் கொஞ்சமும் பரிச்சயம் இல்லாத, நீச்சல் தெரியாதவன்” கரிகாலன் மட்டும் தான்.

எல்லோரும் நம்பிக்கையுடன் இருந்த போதும், அரியையும், ரட்ணாவையும் தவிர வேறு எவரும் வரவில்லை……

கரிகாலன் வரவில்லை……

டேவிட்டும் வரவில்லை……

டேவிட் பங்கு கொண்ட தாக்குதல்கள்

  • 1985 ஆம் ஆண்டு மன்னார் பொலிஸ் நிலையத் தாக்குதல் நடைபெற்ற போது தாக்குதற் குழுவை படகில் ஏற்றி மறுகரைக்கு (மன்னார் தீவுக்குள்) கொண்டு சேர்க்கும் கடற்புலிகள் குழுவின் உதவிப் பொறுப்பாளராக இருந்தார். படகில் சென்று பாதுகாப்பாக இறங்குவதே தாக்குதலின் முதல் வெற்றி எனக் கருதப்பட்டது. இத்தாக்குதல் முடிந்த பின்பு அப்போதைய மன்னார்த் தளபதி லெப். கேணல் விக்ரர் அவர்களால் டேவிட் பாராட்டப்பட்டான்.
  • 1987 ஆம் ஆண்டில் ஆனையிறவு முகாமிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சிறீலங்கா இராணுவம் முன்னேற முயன்ற போது கிட்டு அண்ணா தலைமை தாங்கிய தாக்குதலின் போது வீரமரணம் அடைந்த லெப். அங்கிளின் குழுவில் ஒருவராகச் சண்டை செய்து தோளில் காயமடைந்தார்.
  • 1987 ஆம் ஆண்டு யாழ். தொலைத் தொடர்பு நிலையத் தாக்குதலில் (8 இராணுவத்தினரைக் கைது செய்த போது) 50 கலிபர் துப்பாக்கியுடன் ஒரு குழுவை வழிநடத்தினார்.
  •  1987 ஆம் ஆண்டு பூநகரிக் கோட்டைத் தாக்குதலின் போதும் 50 கலிபர் குழு ஒன்றுடன் சென்று சண்டையில் ஈடுபட்டார்.
  • 1989 நெல்லியடியில் இந்திய இராணுவக் காவலரண் மீதான தாக்குதலின் போது அத்தாக்குதற் குழுவின் இரண்டாவது பொறுப்பாளராகச் சென்றார்.
  • 1990 ஆம் ஆண்டு வடமராட்சிக் கடலில் சிறீலங்காக் கடற்படையின் தாய்க்கப்பல் மீது நடாத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல் (கரும்புலி மேஜர் காந்தரூபன், கரும்புலி கப்டன் வினோத், கரும்புலி கப்டன் கொலின்ஸ் ) நடவடிக்கையினை தலைமை தாங்கியவர் இவரே.

நினைவுப்பகிர்வு:


ச.பொட்டு
புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

விடுதலைப்புலிகள் குரல்: 26