தமிழகத்தில் உரிய அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், பேனர்களை நிறுவக்கூடாது: நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை

97 0

தமிழகத்தில் உரிய அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், பேனர்கள் வைத்தால் அதிகபட்சமாக மூன்றாண்டு சிறைத் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் வரை விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஜூன் 1 ஆம் தேதி கோவை அருகே, கருமத்தம்பட்டியில், ராட்சத விளம்பர பேனர் பொருத்தும் பணியின் போது, சாரம் சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, “அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக உயரத்தில் பேனர்கள் அமைக்கப்பட்டதும், அடித்தளம் பகுதி முறையாக பராமரிக்கப்படாததுமே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம்” என்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உரிய அனுமதியின்றி பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைக்கும் நிறுவனங்கள் ,தனிநபர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் மீது ஒரு வருட சிறை தண்டனையோ அல்லது ஐந்தாயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்க வழிவகை செய்யப்படும். அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் வரை விதிக்கப்படும். உரிமக் காலம் முடிந்தும் பேனர்களை அகற்றாவிட்டால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து நடந்து காயமோ, உயிரிழப்போ ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை வழங்குவது சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது தனி நபரின் பொறுப்பே என்று நகராட்சி நிர்வாகத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து இன்று (ஜூன் 9) காலை கோவை மாவட்டம் பீளமேட்டில் அவினாசி சாலையில் சட்டத்தை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன.

ஏற்கெனவே கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார். கடந்த வாரம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் போலீசார் இணைந்து தனி குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியிருந்தார்.

அதேபோல் சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்டத்தில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். பல்வேறு மாவட்டங்களிலும் சட்டவிரோத பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை விபத்து: நடந்தது என்ன? கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே, கோவை – அவிநாசி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியவாறு, ராமசாமி என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் அச்சாலையில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் பார்க்கும் வகையில் பிரமாண்ட விளம்பர பேனர் பொருத்தும் பணிகள் ஜூன் 1 மேற்கொள்ளப்பட்டன.

சேலத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பழனிசாமி என்பவரது தலைமையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சேலத்தில் இருந்து கோவைக்கு வந்த 7 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்கள், அங்கு ஏற்கெனவே பொருத்தப்பட்டிருந்த விளம்பரத்தை அகற்றிவிட்டு, புதிய விளம்பர பேனரை பொருத்திக் கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்று வீசியதுடன், மிதமான மழையும் பெய்து வந்தது. காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், விளம்பர பேனர் பொருத்தவிருந்த இரும்பு சாரம் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் சாரத்தின் அடியில் சிக்கினர். இதைப் பார்த்த அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டுநர்கள், கருமத்தம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பொதுமக்களுடன் இணைந்து, சாரத்தை அப்புறப்படுத்தி அடியில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்டனர். சாரத்தின் மீது இருந்து கீழே விழுந்தவர்கள் மீது சாரம் விழுந்து அழுத்தியதால் மூன்று பேரும் உயிரிழந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையி்ல் உயிரிழந்தவர்கள் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த குமார்(40), குணசேகரன்(52), சேகர்(45) ஆகியோர் என தெரிய வந்தது.

உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 2 பேர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.