இந்திய பெருங்கடவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சீன மீன்பிடிக் கப்பல் லு பெங் யுவான் யூ-028 மீட்பு பணிகளில் ஈடுப்பட்ட இலங்கையின் மீட்பு குழுவை கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பு – ஷங்ரில்லை ஹோட்டலில் நடைப்பெற்றது. இதன் போதே சீன தூதுவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க, அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உட்பட பன்னாட்டு தூதுவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் என பல தரப்பினரும் கலந்துக்கொண்டனர். மீட்பு பணியில் ஈடுப்பட்ட இலங்கை கடற்படை கப்பலான விஜயபாகு பி-627 இன் அனைத்து அதிகாரிகள் மற்றும் மாலுமிகளும் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சீன தூதுவர் குயி ஷெங்வொங் கூறுகையில்,
விபத்துக்குள்ளான சீன மீன்பிடி கப்பலுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்க்கமான மற்றும் சரியான நேரத்தில் எடுத்த முடிவிற்கு நன்றி தெரிவிக்கிறோம்.
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு, முப்படைகள் மற்றும் இலங்கை கடற்படைக் கப்பலான விஜயபாகுவின் அனைத்து அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் ஜனாதிபதியின் உடனடி உத்தரவுக்கு அமைய செயல்பட்டு நீண்ட தூரம் கடலில் பயணித்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.
இதற்காக விசேடமாக இலங்கையின் மீட்பு குழுவிற்கு நன்றி கூறுவதோடு பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன். இலங்கையின் ஒன்பது துணிச்சலான சுளியோடிகள் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஏனைய அனைத்து நாடுகளை விசேடமாக நினைவுக்கூற கடமைப்பட்டுள்ளேன்.
இது சர்வதேச கடமைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு கூட்டு நடவடிக்கை மட்டுமல்ல, சர்வதேச மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்தும் ஒரு சிரேஷ்ட பணியாகும்.
இந்த மனிதாபிமான உதவியை சீன அரசாங்கமும் மக்களும் என்று நினைவில் வைத்திருப்பர். குறிப்பாக விபத்துக்குள்ளான சீன மீனவர்களின் குடும்பத்தினரும் இந்த உதவியை என்றும் மறக்க போவதில்லை.
இரக்கமற்ற கடல் மனிதகுலத்தின் கருணையை மட்டுமே எடுத்துக்காட்டுகிறது. இந்தத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம், சீனாவுடனான இலங்கை அரசாங்கம், மக்கள் மற்றும் இராணுவத்தின் சகோதரத்துவ நட்பை மீண்டும் ஒருமுறை உணர்கிறோம். ஒவ்வொரு நாடும் உலகில் கிராமங்களை போன்றது என்பதை ஆழமாக உணர்கிறோம்.
எனவே தான் அங்கு நாம் துன்பத்தையும் துயரத்தையும் பகிர்ந்து கொள்கிறோம். உலகளாவிய அபாயங்கள் மற்றும் சவால்கள் தொடர்ந்து வெளிப்படும் நேரத்தில், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு மட்டுமே சரியான முன்னோக்கிய வழியாகிறது. மனித குலத்திற்கான பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சமூகத்தை உருவாக்க ஒன்றிணைவோம் என்றார்.
சாகல ரத்நாயக்க
பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புடன் இலங்கையும் சீனாவும் நீண்டகாலமாக உறவை வலுப்படுத்தி வருவதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க இதன் போது தெரிவித்தார்.
மேலும், பல கடினமான காலங்களில் இலங்கைக்கு சீனா உதவியுள்ளது. மீட்புப் பணியை மேற்கொள்வதற்கான முடிவை எடுக்க வேண்டிய தருணம் வந்தபோது, அது கடினமான ஒன்றல்ல. இது சர்வதேச கடமைகள் மட்டுமல்ல, மாறாக இலங்கை மற்றும் சீனாவின் அரசாங்கங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான வரலாற்று உறவுகள் மற்றும் தொடர்புகளில் ஒன்று எனவும் குறிப்பிட்டார்.

விபத்துக்குள்ளான சீன மீன்பிடி கப்பலுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்க்கமான மற்றும் சரியான நேரத்தில் எடுத்த முடிவிற்கு நன்றி கூறுவதாக தெரிவித்துள்ள சீன தூதுவர் குயி ஷங்வொங், இது சர்வதேச கடமைகளை நிறைவேற்றுவதற்கான கூட்டு நடவடிக்கை மட்டுமல்ல, மாறாக சர்வதேச மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்தும் ஒரு உன்னத பணியாகும் எனவும் குறிப்பிட்டார்.