துருக்கியில் தொலைக்காட்சி கோபுரத்தில் ஹெலிகாப்டர் மோதி 5 பேர் பலி

245 0

துருக்கியில் தொலைக்காட்சி கோபுரத்தின் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

துருக்கி நாட்டை சேர்ந்த ஸ்கோர்ஸ்கை எஸ்-76 என்ற தனியார் ஹெலிகாப்டர் இஸ்தான்புல் நகரின் அட்டாடர்க் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதில் இரண்டு பைலட்டுகளுடன் தனியார் நிறுவனத்தின் 5 நிர்வாகிகள் பயணம் செய்தனர்.

இந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் வானில் அடர்ந்த பனிமூட்டம் இருந்துள்ளது. இதனால் பாதை தெரியாமல் தடுமாறியபடி பயணித்த அந்த ஹெலிகாப்டர், திடீரென விபத்திற்குள்ளானது. ஹெலிகொப்டர் தரையில் விழுந்து வெடித்துச் சிதறி சாலையில் சிதறியது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டரின் உடைந்த பாகம் ஒன்று சாலையில் சென்றுக்கொண்டு இருந்த கார் மீது விழுந்துள்ளது. இதில் கார் டிரைவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்துக் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, 236 மீட்டர் உயரமுள்ள தொலைக்காட்சி கோபுரம் மீது மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இஸ்தான்புல் கவர்னர் தெரிவித்துள்ளார்.