கேப்பாபுலவு பிலக் குடியிருப்பு விமானப்படை முகாமின் முன்பாக உள்ள 14 ஏக்கர் காணியும் தனியாருக்குச் சொந்தமானது அல்ல என மீண்டும் பிரதேச செயலகம் உரிமை கோருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்இது தொடர்பில் குறித்த நிலத்தினை உரிமை கோருபவர்கள் மேலும் தெரிவிக்கையில் ,
.இப்பகுதியில் 10 குடும்பங்களிற்குச் சொந்தமான 14 ஏக்கர் நிலம் உள்ளது. இவ்வாறுள்ள 14 ஏக்கர் காணிகளும் 15 மாதங்களுற்கு முன்பாகவே படைகளால் விடுவிக்கப்பட்டிருந்தன. அதனை உரிமையாளர்கள் என்ற வகையில் நாம் ஆளுகை செய்யும் முயற்சியில் அதற்கு பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்காக பணச் செலவில் பொருட்களை கொள்வனவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தோம் இருப்பினும் தகுந்த காரணம் இன்றி தடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தடுப்பதற்கு விமானப்படையினரே காரணம் அப்பகுதிகளை கையகப்படுத்தும் நோக்கிலேயே விமானப்படையினர் பிரதேச செயலகம் ஊடாக இவ்வாறு செயல்படுவதாக கருதுகின்றோம் என்றனர்குறித்த காணிகள் தொடர்பில் மக்கள் சிலரால் கூறப்படும் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் குணபாலனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
அப்பகுதியில் உள்ள காணியை சிலர் சொந்தம் கொண்டாட முயல்கின்றபோதும் அவை அரச காணிகள் என்றே எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எது எவ்வாறு இருப்பினும் அக் காணிகளை கோருபவர்களிடம் அக் காணியின் உறுதி உண்டு பொமிற் உண்டு என்றெல்லாம் கூறப்படுகின்றது. அந்த வகையில் இவற்றில் ஏதாவது ஒன்றை பிரதேச செயலகத்தில் காண்பித்து நிலத்தை கையேற்குமாறு மட்டுமே கூறப்பட்டுள்ளது.
அக் காணிக்கு உறுதியோ அல்லது பொமிற்றோ இருந்தால் அதனை சமர்ப்பித்து விட்டு காணிக்குள் செல்வதற்கு எந்தவிதமான தடைகளும் விடுக்கப்படவில்லை. அவை இல்லாது இருப்பின் அவர்கள் அதனை உரிமை கோர முடியாது . அக் காணிகள் தொடர்பில் ஆய்விற்கு உட்படுத்தவேண்டும். அந்த இடத்தில் பலருக்கு காணி உள்ளது எனக் கூறுபவர்களில் ஒருவர் கூட இதுவரை எந்தவிதமான ஆவணமும் சமர்ப்பிக்கவில்லை என்றார்.

