ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று உண்ணாவிரதம்

279 0

ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

ஜெயலலிதா உடல்நல குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணம் அடைந்தது வரையிலும் மர்மங்கள் நீண்டு கொண்டே செல்கிறது. அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது எப்படி? அதன் தொடர்ச்சியாக என்னென்ன நடந்தது? என்பதற்கு இன்னமும் முழுமையான விடை கிடைக்கவில்லை.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ஜான் ரிச்சர்டு பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா மற்றும் நிதீஷ் நாயக் இது தொடர்பாக விளக்கங்கள் வெளியிட்டனர். எனினும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள பல கேள்விகளுக்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை.

ஜெயலலிதா மரணத்தில் ஏற்பட்டுள்ள மர்மங்களை கண்டுபிடிக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறையால் உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும், சி.பி.ஐ. விசாரித்து உண்மைகளை வெளியே கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று (புதன்கிழமை) தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி, மராட்டிய மாநிலம் மும்பை, கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் சிங்கப்பூரிலும் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளனர்.

காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரையிலும் இந்த போராட்டம் நடைபெற உள்ளது. உண்ணாவிரத போராட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடக்கும் உண்ணாவிரதத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளரும், செய்தித்தொடர்பாளருமான டாக்டர் ஏ.அழகு தமிழ்ச்செல்வி அகன்ற திரையுடைய தொலைக்காட்சி வசதி உள்ள பிரசார வாகனத்தை ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அர்ப்பணிக்கிறார். அந்த வாகனத்தின் செயல்பாட்டை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைக்கிறார்.

அந்த பிரசார வாகனத்தில் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் புகைப்படமும், ‘தர்மம் வெல்லும், நாளை நமதே, நிரந்தர முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்’ என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளது. ராஜரத்தினம் மைதானம் அருகே இந்த வாகனம் நிறுத்தப்பட உள்ளது. தலைவர்களின் உரைகளுக்கு இடையே பிரசார வாகனத்தில் அகன்ற திரையுடைய தொலைக்காட்சியில் 3 நிமிட வீடியோ காட்சி ஒளிபரப்பப்படுகிறது.

அதில், டாக்டர் ஏ.அழகு தமிழ்ச்செல்வியின் மகள் நிகிதா, ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் செய்த சாதனைகள், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு எப்படி பாத்திரமாக இருந்தார், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் விலகவேண்டும் என்பது குறித்து பேசுகிறார். அந்த வீடியோ காட்சியின் பின்னால் ஓ.பன்னீர்செல்வத்தின் சாதனைகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

இதுபோல மாவட்ட தலைநகரங்கள், புதுச்சேரி, காரைக்காலில் நடக்கும் உண்ணாவிரத போராட்டங்களில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் என திரளாக கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவிய பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முதன் முதலாக தங்களுக்கு இருக்கும் பலத்தை இன்று வெளிப்படையாக காட்ட உள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தை பெரிய அளவில் வெற்றி பெற செய்வதற்காக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட வாரியாக பட்டியல் தயாரித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை திரட்டுவதில் தீவிரமாக உள்ளனர்.