அனைத்துலக பெண்கள் தினம் ….. ஓன்றிணைந்த பலத்துடன் அணிதிரள்வோம்-தமிழ்ப் பெண்கள் அமைப்பு – யேர்மனி.

318 0

உலகில் எந்த ஒரு இனத்தினதும் விடுதலை என்பது அவ்வினத்தில் பெண்களின் வாழ்வியல் உரிமைகள் சமூகத்தால் எவ்வாறு மதிக்கப்படுகின்றது என்பதிலேதான் தங்கியுள்ளது
சர்வதேச பெண்கள்; தினம் மார்ச் 8ஆம் திகதி உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களுக்கும் ஆண்களைப் போல சம ஊதியம், எட்டுமணி நேர வேலை, வேலைத்தள வசதிகள் என்ற கோரிக்கைகளுக்காகப் பெண்கள் பேரணி நடத்தித் தம் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

18ஆம் நூற்றாண்டிலேயே பெண்விடுதலைச் சிந்தனைகள் எழுச்சி பெற்றிருந்தாலும் 19ஆம் நூற்றாண்டில் தான் பெண்ணியம் தனிக்கோட்பாடாக வலுப்பெற்றது. மேலைத்தேசம் கீழைத்தேசம் எங்கும் பெண்ணொடுக்குமுறை இருந்த காலம் கடந்து இன்று உலகின் மூலைமுடக்கெங்கும் பெண்கள் தம் உரிமைகளுக்குப் போராடும் நிலையில் வெற்றி கண்டும் வருகின்றார்கள். இனம், மதம், மொழி, கலாசாரம், சமூகப்பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றால் பலதரப்பட்டவர்களாய் இருந்த போதிலும் பெண்கள் எனும் அடையாளத்தால் ஒன்றுபட்டு நிற்கும் பெண்ணினம் சமூகநீதி, சமவுரிமை, சமத்துவம் போன்றவற்றிற்காக ஒன்றுதிரண்டு அகிலமெங்கும் குரல் கொடுக்கும் நாள் இப் பெண்கள்தினம்.

தமிழீழ விடுதலையில் பெண்களின் வாழ்வியல் உரிமைகள் உயர்ந்த அங்கீகாரத்தையும், மதிப்பையும் பெற்றிருந்தது, மட்டுமல்லாமல் தேசியத் தலைவர் அவர்களது உயரிய சிந்தனையின் வெளிப்பாடாக தமிழீழப் பெண்கள் சமர்களம் வென்றவர்களாக விடுதலைப் போரின் ஓர் ஆக்க சக்திகளாக உருவெடுத்திருந்தார்கள்.

ஆனால் உலக பயங்கரவாதத்தின் துணையோடு சிறீலங்கா இனவெறி அரசால் ஏவிவிடப்பட்ட அரச பயங்கரவாதம் எம் இனத்தின்மீது பாரிய இன அழிப்பைச் செய்தது மட்டுமன்றி எம்மினப் பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வுகள், கொலைகள், விதவைக் கோலங்கள், உறவுகளைத் தேடியலையும் அவலங்கள் போன்ற மானுடமே வெட்கித் தலைகுனியக் கூடிய காட்டுமிராண்டித்தனங்களை இன்றுவரை செய்து வருகின்றது. பெண்களுக்கெதிரான கொலைகளும் சிறுவர்களுக்கெதிரான பாலியல்வன்முறைகளும் கொலைகளும் மிகமோசமான முறையில் தொடர்ந்தும் நடைபெற்றுவருகின்றது.

ஐ.நா உட்பட்ட உதவி நிறுவனங்களை வெளியேற்றிவிட்டு சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ்மக்கள் கொல்லப்பட்டதும், பல்வேறு நாடுகள் உதவியளித்ததும் இப்போது வெளிவந்தவண்ணம் உள்ளது. அது மட்டுமல்லாமல் சனல் 4 தொலைக்காட்சியூடாக பெண்கள் மீதான வன்புணர்வுகள், பெண்கள் சிறுவர்கள் உட்பட சரணடைந்த மக்கள் மீதான கொலைகள் போன்றவை ஆவணங்களாக்கப்பட்டு ஐ.நா சபையிலும் உலக அரங்கிலும் வெளிப்படுத்தப்பட்டதோடு சிறீலங்கா அரசின் இனவழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தவும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

போரின் பின்பான காலங்களில் தமிழீழத்தில் சிறீலங்கா இராணுவத்தால் திட்டமிட்ட ரீதியில் பெண்கள்மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. திட்டமிட்ட முறையில் கருத்தடைகள், பாலியல் ரீதியான தொல்லைகள், இனக்கலப்பிற்கு தூண்டுதல், போன்ற கொடுமைகள் நிகழ்ந்து வருகின்றது. 90ஆயிரத்துக்கும் மேட்பட்ட பெண்கள் விதவைகளாகவும்; ஆதரவற்றவர்களாகவும், உளவியல்பாதிப்புக்கு உட்பட்டவர்களாகவும் அலைகின்ற நிலைமையே உள்ளது. இவ் அவலங்களுக்கெதிராக குரல் கொடுக்க இராணுவ அடக்குமுறைக்குள் சிக்கியிருக்கும் மக்களால் முடிவதில்லை. வன்முறைக்கு உட்படுத்தபட்ட ஆயிரக்கணக்கான பெண்களும் குடும்பத்தினரும் அவர்களது உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள .

தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசுமீது கடந்த நான்கு வருடங்களாக ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் ஒருவித மென்போக்கே காட்டப்பட்டு வருகின்றது. உலக நாடுகளின் எத்தகைய அறிவுறுத்தல்களையும் செவிசாய்க்க இலங்கை அரசு தயாராக இல்லை என்பது புரிந்தபோதும் கூட ஐநா சபை காத்திரமான எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. இன்றய சூழலில் தமிழ்மக்களாகிய எமக்கு இருக்கக்கூடிய ஒரேவழி ஒன்றுபட்டு சர்வதேசத்தை நோக்கி தமிழின அழிப்புக்கெதிரான நீதிகோருதல் ஒன்றேயாகும்.

புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்ப்பெண்கள் விழிப்புணர்வும்,அரசியல் அறிவும் கொண்டவர்களாக மாறவேண்டிய சூழல் அவசியமானதாகிறது. இங்கும் தமிழ்ப் பெண்களுக்கெதிரான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் இடம்பெறுவதையும், அதற்கெதிராக ஒன்றுபட்டு போராடவேண்டிய தேவையும் உணரப்பட்டுள்ளது. ஆகவே பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கெதிராக பெண்கள்தான் போராடவேண்டும். தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கான உதவிகளை முன்னெடுப்பதும் எமது தலையாய கடமையாக உள்ளது.

அன்பான உறவுகளே! தமிழ்ப் பெண்களாகிய நாங்கள் உலகப் பெண்ணினத்துக்கு ஓர் அரிய செய்தியை கூறுவோம். தமிழீழப்பெண்கள் எத்தகைய அடக்குமுறைக்கும் எதிராகக் குரல் கொடுக்கக்கூடியவர்கள் என்பதையும், ஓர் அறிவார்ந்த சமூகம் என்பதையும், உலகில் எங்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்றாலும் எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூடியவர்கள் என்பதையும் உணர்த்துவோம். தமிழ்ப் பெண்களாகிய நாங்கள் எமது நிறைவான உரிமைகள் தமிழீழ விடுதலையுடன் கூடியதாகவே இருக்கின்றது என்ற உண்மையை உலகிற்கும், மானுடத்தை நேசிக்கும் அமைப்புகளுக்கும் புரியவைப்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

தமிழ்ப் பெண்கள் அமைப்பு – யேர்மனி.