ஈழத் தமிழரும் – இலங்கைத் தமிழரும்! – இரா.மயூதரன்!

479 0

இலங்கை, இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்தை மறுத்து, ஈழம், ஈழத் தமிழர் என்ற உரிமை முழக்கத்தை முன்வைப்பவர்களை விமர்சிக்கின்றோம் என்ற பெயரில் விதண்டாவாதம் செய்யும் வீணர்களின் குற்றச்சாட்டுகளை அப்படியே கடந்துவிட முடியாது.

ஈழம் குறித்து பேசுவதாயின் நாட்டிலேயே இருந்திருக்கவேணும்…

இரட்டை நாக்கில் பேசும் வீணர்களின் இந்த குற்றச்சாட்டானது அவர்களது ஆற்றாமையின் வெளிப்பாடாகும். ஈழத் தமிழ் மக்களின் தாயகக் கனவிற்கு உயிர்கொடுத்து உத்வேகமளிக்கும் விடுதலைப்போராட்டமானது ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற தாரக மந்திரத்தின் வழியேதான் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

ஆயுத மௌனிப்பின் பின்னர் ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற நிலைமாற்றம் கண்டு உலகத் தமிழர் பெருவெளிக்கு நகர்த்தபட்டுள்ள விடுதலைப் போராட்டமானது தாயகத்தை விட்டு புலம்பெயர்ந்தவர்களாலேயே உறுதியான வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு நாட்டைவிட்டு புலம்பெயர்ந்து வாழ்ந்து வருபவர்கள் ஈழம், விடுதலை, போராட்டம் குறித்து கதைக்கும் போது அவர்களை நோக்கி ‘ஈழம் குறித்து பேசுவதாயின் நாட்டிலேயே இருந்திருக்கவேணும்…’ என்று குதர்க்கம் பேசுபவர்கள், நாட்டில் இருந்து ஈழம் குறித்தும் விடுதலை குறித்தும் போராட்டம் குறித்தும் கதைப்பவர்களையும் விட்டுவிடுவதில்லை.

பெரும் பலத்துடன் போராடியவர்களாலேயே ஒண்டும் செய்ய முடியவில்லை… போராட்டம் போராட்டம் என்று சனத்தையும் சாகடிச்சு தாங்களும் அழிஞ்சதுதான் மிச்சம். திரும்பவும் உதுகளை கதைக்கிறது தேவையில்லாத வேலை. இனிமேலாவது இருக்கிற சனத்தை நிம்மதியா இருக்க விடுங்கோ… என்று அவர்களையும் விமர்சித்தே வருகின்றனர்.

ஈழம் குறித்து கதைப்பவர்கள் அங்கேயே இருந்து செத்திருக்க வேண்டியதுதானே….?

ஒட்டுமொத்த தமிழர்களின் சுதந்திர வாழ்விற்காக சாவுக்கு நாள் குறித்து சரித்திரமாகிவிட்டவர்களது இலட்சியக் கனவினை தோள்களில் சுமந்து விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியை அடைகாத்துவருபவர்களை பார்த்து ஏற்படும் அச்சமே இவ்வாறு புலம்ப வைக்கின்றது.

தமது கையாலாகத்தனத்தை மூடி மறைப்பதற்காக மண்ணுறங்கும் மாவீரர்களை துணைக்கழைப்பது அயோக்கியத்தனமாகும்.

இலங்கை என்ற அடையாளம் வேண்டாம் என்பவர்கள் ஏன் இலங்கை கடவுச்சீட்டை வைத்திருக்கிறார்கள்…?

இந்தக் கேள்வியானது கேள்வியை எழுப்புபவர்களது முட்டாள்தனத்தின் வெளிப்பாடாகும். ஈழத் தமிழர்களின் தேசமாக தமிழீழம் மலர்ந்த பின்னர் தமிழீழ கடவுச்சீட்டு வழங்கப்படும் சூழமைவில் அதனை மறுத்து இலங்கை கடவுச்சீட்டை வைத்திருக்கும் போது கூறவேண்டியதை இப்போது கூறுகிறார்கள் என்றால் அவர்களை முட்டாள்கள் என்று சொல்லாமல் வேறு எப்படி குறிப்பிடுவது…?

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில், வெளிநாடுகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு சென்ற விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் கூட இலங்கை கடவுச்சீட்டை பெற்று அதனைப் பயன்படுத்தியே சென்று வந்திருந்தார்கள்.

தற்போதைய சூழலில் இலங்கையை விட்டு வெளியேற வேண்டுமாயின் உலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கை கடவுச்சீட்டு அவசியமாகும். தமிழ்நாடு தவிர்த்து புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் ஈழத் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்று அந்தந்த நாடுகளின் கடவுச்சீட்டுக்களைப் பெற்று பயன்படுத்தி வருகின்றார்கள்.

பல ஆண்டுகால அகதி வாழ்வின் பின்னர் குடியுரிமை கிடைத்த போதிலும் இலங்கை கடவுச்சீட்டை தவிர்த்து அந்தந்த நாட்டு கடவுச்சீட்டை பெறுவதற்காக மேலும் ஓரிரு ஆண்டுகளை தியாகம் செய்துவரும் உறவுகளை இந்த வீணர்களுக்கு தெரிந்திருக்காது. அப்படி ஒரு வாய்ப்பு தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கும் கிட்டுமாக இருப்பின் தம்மை ஈழத் தமிழ் குடிமக்களாகக் கருதுபவர்களும் இலங்கை கடவுச்சீட்டை புறக்கணித்துவிடுவார்கள்.

சும்மா ஏதோ கதைக்க வேண்டும் என்பதற்காக கதைப்பவர்களது இந்த பலவீனமான வாதங்களை போகிற போக்கில் கடந்து சென்றுவிட முடியாது. எமது அடையாளங்களை நெஞ்சில் சுமந்தும் இலட்சியங்களை தோள்களில் சுமந்தும் விடுதலைப் பெருநெருப்பை அணையாது காத்துவருபவர்களை நோக்கி விதண்டாவாத கருத்துக்களை உமிழ்பவர்கள் எதிரியை விட கொடுமையானவர்களாவர்.

பழந்தமிழ் இலக்கியங்களில் ‘ஈழம்’!

தற்காலத்தில் இலங்கை என அழைக்கப்படும் தீவானது பழங்காலத்தில் ஈழம் என்றே அழைக்கப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் ‘ஈழத்துணவு’, ‘ஈழத்துப் பூதந்தேவனார்’ போன்ற சொற்கள் அதனை நிரூபித்துள்ளது. அதைவிட பழந் தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட சாசனங்களும் ஈழம் அல்லது ஈழ மண்டலம் என்ற பெயரைப் பயன்படுத்தியே உருவாக்கப்பட்டிருந்தது.

தமிழின் சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலையில் வரும்,

ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்,
அரியவும், பெரியவும், நெரிய ஈண்டி,
வளம் தலைமயங்கிய நனந் தலை மறுகின்
நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும்
ஏமாப்ப இனிது துஞ்சி.

என்ற பாடலில் ஈழத்து உணவு என்ற சொல்லாடல் மூலம் ஈழம் குறித்துரைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கியப் படைப்புகள் மூலம் தமிழ் வளர்த்த புலவர் பூதன் தேவனார் ஈழத்தை சேர்ந்தவர் என்பதனால்தான் ஈழத்துப் பூதன் தேவனார் என்றழைக்கப்பட்டார். அவரால் இயற்றப்பட்ட ஏழு பாட்டுகள் சங்க இலக்கியத்துள் சேர்க்கப்பட்டுள்ளது.

பதினெட்டாம் நூற்றாண்டுவரை இலங்கையின் ஆட்சி மொழியாக தமிழே இருந்துவந்துள்ளது. சிங்களர்களும் தமிழைக் கற்குமளவிற்கு இலங்கை முழுவதும் தமிழின் ஆட்சி நீடித்து நிலைத்திருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் தமிழிலேயே சிங்கள அரசர்கள் கையெழுத்து இட்டமை அதன் சாட்சியாகும்.

அரசியல் மயப்பட்டு ‘தமிழீழம்’ ஆகிய ‘ஈழம்’!

இவை ஒருபுறமிருக்க இலங்கை என்று அழைக்கப்பட்ட பின்னரும் ‘ஈழம்’ என்ற அடையாளத்தை தமிழர்கள் தொடர்ந்து பயன்படுத்தியே வந்தார்கள். ஈழத்தின் ஆரம்பகால பாத்திரிகைகளில் முக்கியமாகத் திகழ்ந்த ‘ஈழகேசரி’ பத்திரிகை 1930 களில் வெளிவந்திருந்தது.

ஈழத் தமிழர்களின் பண்பாட்டு தலைநகராக விளங்கிவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து 1959 இல் வெளிவந்த ‘ஈழநாடு’ பத்திரிகையானது அன்றைய நிலையில், கொழும்பு தவிர்ந்த இலங்கை நகரமொன்றிலிருந்து வெளிவந்த முதல் நாளிதழ் என்ற சிறப்பிற்குரியதாகும்.

இவ்வாறு தமிழர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் நோக்கில் பயன்படுத்தப்பட்டு வந்த ‘ஈழம்’, சிங்களவர்களால் இன ரீதியிலான பாகுபாடுகள் திணிக்கப்பட்ட போது தமிழ் அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட தனி நாட்டு கோரிக்கை மூலம் ‘தமிழீழம்’ என்று அடையாளப்படுத்தப்பட்டு அரசியல் மயப்படுத்தப்பட்டது.

ஒட்டுமொத்த இலங்கைத் தீவுமே ‘ஈழம்’ என்று அழைக்கப்பட்ட நிலையில் தமிழ் மொழி, இன ரீதியில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கை உள்ளடக்கிய பகுதியை ‘தமிழ்-ஈழம்’ என்று அடையாளப்படுத்தப்பட்டது. அதுவே ‘தமிழீழம்’ ஆக தமிழர்களின் மனதில் நிலைபெற்றுவிட்டது.

பிரிவினைக்கு வித்திட்ட பேரினவாதம்!

சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தின் வழி நின்று சிறிலங்காவின் ஆட்சி அதிகாரத்தை கொண்டு நடத்தியவர்களின் தமிழர் விரோதப் போக்கு நாளடைவில் இனப்படுகொலையாக விசுவரூபம் எடுத்ததன் பின்னணியே தமிழர் மனங்களில் பிரிவினைக்கான விதையை விதைத்தது.

அறவழியில் மேற்கொள்ளப்பட்ட தமிழர்களின் உரிமைப் போராட்டம் சிங்கள காடையர்களாலும் சிங்கள இராணுவத்தினராலும் நசுக்கப்பட்ட போது வரலாற்றுத் தன்னியல்பில் தமிழ் இளைஞர்களின் கைகளில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டது.

தமிழர்களின் சுதந்திர வாழ்விற்கு தனித் தமிழீழம் ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் உருவாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சியானது மேல்நோக்கிச் செல்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பு கொடூரங்கள் குறைவடைந்தது. இதுவே தமிழர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்று மக்கள் போரட்டமாக தமிழீழ விடுதலைப் போராட்டம் வீச்சுப்பெறுவதற்கான அடிப்படையாக அமைந்தது.

இவ்வாறு மக்கள் போராட்டமாக பரிணாம வளர்ச்சிபெற்று மகத்தான போரியல் சாதனைகள் படைத்து முப்படைக் கட்டமைப்பை நிறுவி இலட்சியத்தை அடையும் தருணத்தில் காட்டிக்கொடுப்புகளாலும், துரோகத்தாலும், பிராந்திய உலக வல்லரசுகளின் சுயநலன்சார் தலையீட்டினாலும் பெரும் அழிவுகளைச் சந்தித்துள்ளது. தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய ஆயுதங்கள் அதே தமிழர்களின் பாதுகாப்பிற்காக மௌனிக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் எமது தனித்துவ அடையாளங்களை நாம் தக்கவைப்பது இன்றியமையாததாகும்.

இந்நிலையில், உலகின் தொன்மையான தமிழ் இனம் இன்று தனது இருப்பினை பாதுகாத்துக்கொள்ள முடியாத கையறு நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் கையாலாகத்தனமே தமிழர் வீழ்ச்சிக்கு காரணம்!

சுமார் எட்டுக்கோடி தமிழர்களை கொண்ட தமிழ்நாடு பெயரளவிலான ஒரு அரசாகவே செயற்பட்டு வருகின்றது. தனது சொந்த மக்களாகிய மீனவர்களைக்கூட காப்பாற்ற முடியாததோடு அண்டை மாநிலங்களினால் அடாவடியாக பறிக்கப்படும் உரிமைகளையும் தக்கவைக்க முடியாத பலவீனமான அதிகாரத்தைக் கொண்டதாகவே தமிழ்நாடு அரசு செயற்பட்டு வருகின்றது.

2008/9 இல் மாபெரும் இன அழிப்பு நடந்தேறும் போது தமிழ்நாட்டு ஆட்சிப் பொறுப்பில் இருந்த கருணாநிதி அவர் குடும்பம் சார்ந்த ஊழல் விவகாரத்தை முன்னிறுத்தி ஆட்சி அதிகாரத்தை செயலற்றதாக்கியிருந்தார் என்றால் இன்றைய அதிமுக அரசும் ஊழலின் பின்னணியில் தடுமாறி வருகின்றது.

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு விரட்டிக் கொண்டிருந்த போதிலும் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஓரளவுக்கு தமிழர்களின் உரிமைகளுக்கு பாதுகாவலராக இருந்தார். தனது உறுதியான ஈழ ஆதரவுத் தீர்மானங்களின் மூலம் இந்திய மத்திய அரசிற்கும் சிறிலங்கா அரசிற்கும் சாவாலானவராகவே விளங்கி வந்திருந்தார். அவரது மரணத்தின் பின்னரான தமிழ்நாட்டு நிலவரங்களே அதனை நிரூபித்துவருகிறது.

ஆனால் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தலைமையில் நிழல் அரசாட்சி தமிழீழத்தில் நடைபெற்ற போது தமிழர்கள் வாழும் இடமெங்கும் அதன் வீச்சு சென்றடைந்திருந்ததை யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

வரலாறு திரும்புகிறது!

‘நிறைவாகும் வரை மறைவாக இரு’ என்ற உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஐய்யாவின் சிக்கன வார்த்தைக்குள் மௌனித்திருக்கும் விடுதலைப் போராட்டம் வரலாற்று இருளகற்றி முகம்காட்டும் சூழமைவை ஏற்படுத்தும் விதமான மக்கள் போராட்டங்கள் தமிழர் தாயகங்களில் இளைஞர்களது பங்கேற்பில் நடந்தேறிவருகின்றமை வரலாற்றுத் திருப்புமுனையாகும்.

வாழ்வா சாவா என்ற கையறு நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளதன் வெளிப்பாடாகவே, தாயகத்தில் இராணுவ முற்றுகைக்குள்ளாகவே போராட்டங்களை மேற்கொள்ளும் சூழலைத் தோற்றுவித்துள்ளது.

நிலமீட்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விடயம், வேலைவாய்பு ஆகிய பிரச்சினைகளை முன்னிறுத்திய மக்கள் போராட்டங்களும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை பிரகடனப்படுத்தும் ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிகளும் அதன் வெளிப்பாடேயாகும்.

ஆயுதமௌனிப்பு தொடங்கி இந்த நொடிவரை, இறுதிக்கட்ட போரின் போதான கசப்புணர்வுகளை புறந்தள்ளி ‘இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நடக்குமோ…?’ என்ற கேள்விக்குள்ளாகவே தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களையும் புலிகளையும் தேடுமளவிற்கு புலிகளின் ஆட்சி தமிழர்களுக்கு பாதுகாப்பரனாக இருந்துள்ளது.

சிங்கள அரசின் அடக்குமுறையும் தமிழ் அரசியல் தலைவர்களின் தமிழர் விரோத செயற்பாடுமே தமிழர்களை போராட்டத்திற்குள் வலிந்து தள்ளியுள்ளது. இந்தப் பின்னணியில் தலைவர் பிரபாகரன் அவர்களையும் புலிகளையும் தேடத்தொடங்கியுள்ள மக்கள் ஒரு கட்டத்தில் தாமே புலிகளாவதையும் தடுக்க முடியாது.

அதற்கான முழுப் பெருமையும் அடிமைப்படுத்தி அழித்தொழிக்க முனையும் சிறிலங்கா அரசையும் சலுகைகளுக்காக இனத்தின் தன்னுரிமையை அடமானம் வைத்து அடிபணிவு அரசியல் செய்துவரும் சம்பந்தன்-சுமந்திரன் களையும் பிராந்திய நலன் சார் நிலைப்பாட்டிற்குள் நின்று அயோக்கியத்தனம் செய்யும் சர்வதேச நாடுகளையுமே சாரும்.

தமிழர்கள் தன்னுரிமையுடன் வாழ வேண்டுமாயின் சுதந்திர தமிழீழம் ஒன்றே இறுதியான முடிவாகும். அதை நோக்கியதான பயணத்தில் எமது அடையாளங்களை முன்னிறுத்தியதான செயற்பாடுகள் இன்றியமையாததாகும். அதனை மெய்ப்பிக்கும் வகையில் தாயகத்தில் உள்ள இளைஞர்களே தமிழீழத்தை வலியுறுத்தி ஈழத் தமிழர்களாக எழுச்சி பெற்றுள்ளார்கள்.

புலத்திலும் தாயக்திலும் ஈழத் தமிழர் என்ற அடையாளத்தில் இளைஞர்கள் அணியமாகியுள்ளமை மண்ணுறங்கும் மாவீரத்தின் வெளிப்பாடேயாகும். இந்த எழுச்சிப் பிரவாகத்தில் சந்தர்ப்பவாதிகள் பதர்களாகிவிடுவது திண்ணம். ஈழத் தமிழர்களாக ஒன்றிணைந்து தமிழீழ விடுதலையை விரைவாக்குவோம்.

‘விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய நெருக்கடியால் பிறக்கும் துன்பத்தை முழுத் தேசிய இனமும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது, நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும்.’ – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

இரா.மயூதரன். (07/03/2017)
mythrn@yahoo.com