தமிழகத்தில் பன்றி காய்ச்சல் கட்டுப்படுத்தப்படவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்

292 0

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்று மயிலாடுதுறையில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற மே மாதத்திற்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும். இந்த தேர்தலை நடத்துவதற்கு அ.தி.மு.க. முட்டுக்கட்டையாக உள்ளது. ஆனால், பா.ஜனதா கட்சி உரிய நேரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது. தமிழகத்தை ஆளும் கட்சிக்கும், தி.மு.க.வுக்கும் ஆதரவாக மக்கள் இருக்கமாட்டார்கள். தற்போது ஊழலுக்கு எதிராகதான் மக்கள் திரண்டு வருகின்றனர். நீட் தேர்வு நடத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாக உள்ளது. ஏனென்றால் இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

தமிழகத்தில் தற்போது ரே‌ஷன் பொருட்கள் கிடைக்கவில்லை. பன்றி காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. நாகரீகமான அரசியல் சூழ்நிலை இல்லை. இதனால் வலுவான தலைமை தமிழகத்திற்கு தேவை. அதற்கு பிரதமர் நரேந்திரமோடி துணை புரிவார். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு இருந்தால் அதனை திணிக்கபோவதில்லை. மணல்மேடு அருகே உள்ள தலைஞாயிறு அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிலவி வரும் தொழிலாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகளின் பிரச்சனைக்கு பா.ஜனதா கட்சி தீர்வு கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மயிலாடுதுறை அருகே உள்ள நாராயணமங்கலத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் பயிர் கருகியதால் மயங்கி விழுந்து இறந்தார். இவரது வீட்டிற்கு சென்ற தமிழிசை சவுந்தர்ராஜன், ரவிச்சந்திரன் குடும்பத்தினருக்கு நிதிஉதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

அப்போது அவர் ரவிச்சந்திரன் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் உதவித்தொகையை விரைந்து வழங்க கோரிக்கை விடுப்பதாகவும், அவரது குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்தார்.