செய்ட் ராட் அல் ஹுஸைனின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு

353 0
சர்வதேசத்தின் பங்கேற்புடன் சிறப்பு நீதிமன்ற கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுஸைனின் இலங்கை தொடர்பான அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
குறித்த அறிக்கையை வரவேற்பதாக அறிக்கை ஒன்றின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக ஓரளவு முன்னேற்றம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டபோதிலும், பல்வேறு பாரதூரமான பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளமையை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், பாதிக்கப்பட்டவர்களுக்கான மேம்பாடு மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் தன்மை என்பன குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் சபையிடம் கவலையை வெளியிட்டுள்ளது.
இது தவிர, சிவில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் இராணுவத்தின் தலையீடு என்பன குறித்து திருப்திகரமான செயற்பாட்டை காணமுடியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொறுப்புக் கூறல் விடயத்தில் தமது கடமைகளை நிறைவேற்றுவது குறித்து இலங்கை அரசாங்கம் கால வரையறையுடன் கூடிய செயற்பாட்டுத் திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.