ஈராக்கில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்த மொசூல் நகரின் முக்கிய சாலை

287 0

ஈராக்கில் மேற்கு மொசூலில் உள்ள முக்கிய சாலை, இப்போது ராணுவத்தின் பிடியில் வந்து விட்டது. இந்த சாலை, மொசூல் நகர்- டால் அபார் இணைப்புச்சாலை ஆகும்.

ஈராக் நாட்டின் முக்கிய நகரமான மொசூல் நகரத்தின் கிழக்குப்பகுதியை ஏற்கனவே ஈராக் படைகள் 100 நாள் சண்டைக்குப் பின்னர் கடந்த ஜனவரி மாதம் மீட்டு விட்டன.தற்போது மேற்கு பகுதியையும் முழுமையாக மீட்பதற்காக அங்கு கடும் சண்டை நடந்து வருகிறது.

மொசூல் நகர விமான நிலையத்தின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் ஈராக் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்து விட்டன.இந்த நிலையில் மேற்கு மொசூலில் உள்ள முக்கிய சாலை, இப்போது ராணுவத்தின் பிடியில் வந்து விட்டது. இந்த சாலை, மொசூல் நகர்- டால் அபார் இணைப்புச்சாலை ஆகும்.இது குறித்து ஈராக் ராணுவத்தின் 9-வது பிரிவின் தளபதி, செய்தி நிறுவனம் ஒன்றிடம் நேற்று பேசும்போது, “நாங்கள் மொசூல் நகரின் முக்கிய சாலையை திறம்பட எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறோம்” என்று கூறினார்.

இது ஐ.எஸ். இயக்கத்தினரின் பிடி தளர்ந்து வருவதற்கு சான்றாக அமைந்துள்ளது.ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளபதி, “அமெரிக்க ஆதரவு பெற்ற படைகள் மொசூல் நகரையும், ராக்கா நகரையும் ஐ.எஸ். அமைப்பினரிடம் இருந்து 6 மாதங்களுக்குள் முழுமையாக மீட்டு விடும் என்று நான் நம்புகிறேன்” என குறிப்பிட்டார்.