திரவியம் மீதான தாக்குதல்; அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த உத்தரவு

269 0

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நா.திரவியம் (ஜெயம்)  மீதான தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்காக எதிர்வரும் 6ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டார்.

அத்துடன், இந்த வழக்கை எதிர்வரும் 6ஆம் திகதி நீதவான் ஒத்திவைத்துள்ளார். கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நா.திரவியம் (ஜெயம்) பயணித்த வானும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, அங்கு குழுமியவர்கள், தன் மீது தாக்குதல் நடத்தியதாக மாகாணசபை உறுப்பினர் நா.திரவியம், பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த பொலிஸார், சந்தேக நபரை  செவ்வாய்க்கிழமை (28) மாலை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.   இதன்போது பாதிப்புக்குள்ளான மாகாணசபை உறுப்பினர் நா.திரவியம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். வாகரையில் கடந்த திங்கட்கிழமை (27) ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக, உறுப்பினர் நா.திரவியம், தனது வாகனத்தில் வாழைச்சேனையிலிருந்து பயணித்துள்ளார்.

இதன்போது, நாவலடிப் பகுதியில் எதிரே வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் உறுப்பினரின் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. ஏறாவூரைச் சேர்ந்த மீன் வியாபாரியான அலியார் முசாதீக்கீன் என்பவரே மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இந்த விபத்தில் அவர் காயமடைந்துள்ளார். இந்நிலையில், வாகனத்திலிருந்து இறங்கிய உறுப்பினர் திரவியம், மீன் வியாபாரியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.   அப்போது, அங்கு குழுமியவர்கள் விபத்துக்குள்ளான உறுப்பினரின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முயன்றுள்ளனர்.

எனினும், அங்கிருந்தவர்கள் அதற்கு இடமளிக்கவில்லை. இதேவேளை, உறுப்பினர் திரவியத்தை இரண்டொரு பேர் தாக்கியுள்ளனர்.   இது இவ்வாறிருக்க, தாக்குதல்களுக்கு உள்ளான திரவியம், தான் ஒரு மாகாண சபை உறுப்பினர் என்று அறிமுகப்படுத்தியும் அங்கு குழுமியிருந்தவர்கள் அவற்றுக்கு செவிசாய்க்காமல், தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்ட உறுப்பினர் தெரிவித்தார்.    இதேவேளை, காயமடைந்த மீன் வியாபாரியான அலியார் முசாதீக்கீனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். –